அன்வார் பிரதமராகத் தொடர்வதில் பிரச்சினை இல்லை-சட்டத்துறைத் தலைவர் விளக்கம்!
- Muthu Kumar
- 15 Aug, 2025
கோலாலம்பூர், ஆக. 15-
மாட்சிமை தங்கிய பதினைந்தாவது பேரரசரிடமிருந்து டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முழுஅளவிலான மன்னிப்பைப் பெற்றிருப்பது அவர் எந்த தவறும் செய்யவில்லை என்பதன் பொருளாகும் என்று சட்டத்துறைத் தலைவரின் அலுவலகம் நேற்று விளக்கியது.
ஆகவே, தம்புன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலும் பிரதமர் பதவியிலும் அன்வார் தொடர்வது குறித்து இனிமேல் சந்தேகம் எழுப்பத் தேவையில்லை என்று நேற்று வெளியிட்ட அறிக்கையொன்றில் அது குறிப்பிட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் பிரதமர் பதவியிலிருந்தும் அன்வாரைத் தகுதிநீக்கம் செய்ய வேண்டுமென்று முன்னாள் அமைச்சர் பி.வேதமூர்த்தி கூறியிருப்பது பற்றி கருத்துரைத்தபோது அது இந்த விளக்கத்தை அளித்தது.
கடந்த 2018ஆம் ஆண்டில், பிகேஆர் தலைவரான அன்வாருக்கு அரச மன்னிப்பு வழங்கப்பட்ட வேளையில், அவர் சிறையிலிருந்து வெளியான பிறகு ஐந்து வருடங்கள் தேர்தலில் போட்டியிட முடியாது எனும் நிபந்தனை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்படவில்லை என்று செவ்வாய்க்கிழமையன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் வழக்கறிஞரான பி. வேதமூர்த்தி
குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் தேர்வை எதிர்த்து மேற்கொள்ளப்படும் எந்தவொரு சட்ட நடவடிக்கையும் கூட்டரசு அமைப்புச் சட்டத்தின் 118 ஆவது விதியை அனுசரிப்பதாக இருக்க வேண்டும். மேலும், 1954ஆம் ஆண்டு தேர்தல் குற்றங்கள் சட்டத்தின் 38 ஆவது பிரிவின்கீழ் வரைறுக்கப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் அந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அது வலியுறுத்துகிறது என்று சட்டத்துறைத் தலைவரின் அலுவலகம் சுட்டிக் காட்டியது.
இதனிடையே, வேதமூர்த்தியின் வழக்கு காலம் கடந்த நிலையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



