மதங்களை இழிவுபடுத்த மாற்றுத் தரப்பினருக்கு இடமில்லை-ஓம்ஸ் பா. தியாகராஜன்
- Muthu Kumar
- 01 Jan, 2025
கோலாலம்பூர், ஜன. 1-
மலேசிய அரசியல் சாசனத்தில் எல்லா மதத்தினருக்கும் சமமான பங்களிப்பு உள்ளது என்பதை யாரும் மறந்துவிடமுடியாது. நாட்டின் ருக்கூன்நெகாரா தேசிய கோட்பாட்டின்படி நாடு அமைதியான சூழ்நிலையில் இருப்பதை நாம் அனைவரும் உணர முடியும் என்று ஓம்ஸ் அறவாரியத் தலைவர் ஓம்ஸ் பா. தியாகராஜன் தெரிவித்தார்.
இங்கே எல்லா மதத்தினரும், இனத்தவரும் ஒருவருக்கொருவர் மதிக்கின்ற மரியாதை தருகின்ற பண்பாடு உயர்ந்த பண்பாடாக இருந்து வருவதை நாம் காணலாம். உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத நற்பண்புகள் கொண்ட கலை, கலாச்சார மிக்க நாடாக இருப்பதை அனைவரும் அறிவோம்.
மலேசிய மக்களிடையே பிரித்தாளும் கொள்கைகள் இருக்கக்கூடாது என்பதில் அனைவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. எந்த கருத்துகள் ஆனாலும் யாருடைய மனதையும் புண்படுத்தும் வகையில் அமைந்துவிடக்கூடாது என்பதில் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.அண்மையில், சனாதனம் என்றும் சங்கிகள் என்றும் கருஞ்சட்டை என்றும் பேசப்படும் சூழ்நிலை நம்நாட்டிலும் உருவாகியிருப்பதும், உருவாக்கியிருப்பதும் நமக்குள்ளே பேதமைகளை வளர்க்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
கடந்த டிசம்பர் மாதம் தலைநகர் கோலாலம்பூரில் கருஞ்சட்டை இயக்கத்தினர் நடத்திய ஒரு கூட்டத்தில் நடந்த விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் இப்போது பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.இது மோசமான விளைவுகளை நம்நாட்டு மக்களிடத்தில் குறிப்பாக இந்திய சமுதாயத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்துவிடக்கூடும்.
மதங்களையோ சமயங்களையோ தாக்குவதற்கு இந்த நாட்டில் இடமில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று.நாட்டின் ருக்கூன் நெகாராவின் முதல் கோட்பாடான இறைவன் மீது நம்பிக்கை வைத்தல் என்னும் கோட்பாட்டை காலம் காலமாக நாம் பின்பற்றிவருகின்றோம்.
மலேசியா ஓர் இஸ்லாமிய நாடு என்ற போதிலும் எல்லா மதத்தவருக்கும் சுதந்திரதன்மையை வழங்கியிருப்பதை நாம் மறந்துவிட முடியாது. எல்லா கால கட்டத்திலும் இந்து சமயத்திற்கு இந்த நாட்டில் ஒரு மரியாதை உண்டு. அந்த மரியாதையை மற்ற இனத்தவர்களும் மதித்துவருவதை நாம் காணமுடியும்.மலேசியாவில் இந்து பண்டிகைகளுக்கு அரசாங்கம் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருவதை யாராலும் மறந்துவிடமுடியாது. மறக்கவும் முடியாது.
ஆனால், நமக்குள்ளேயே ஒருவருக்கொருவர் மதத்தை இழிவுபடுத்தியும், சிறுமைப்படுத்தியும் நடந்துக்கொள்வதை எந்தக் காலத்திலும் ஏற்க முடியாது. அது மட்டுமல்ல அத்தகைய புனித மிக்க இந்து சமயத்தை தமிழ்நாட்டில் இருந்து வருகின்றவர்கள் பழித்துரைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.அண்மையில் இந்த நாட்டிற்கு வந்த பேராசிரியர் சுந்தரவள்ளி அம்மையார் சமூக வலைத்தளங்களில் நம் நாட்டைச் சார்ந்தவர்களை கடுமையான சொற்களால் பேசியிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது.
தமிழ்நாட்டில் எதைவேண்டுமானாலும், பேசிவிட்டு போங்கள். அதைக்கேட்க எங்களுக்கு அவசியமும் இல்லை. அக்கறையும் இல்லை. ஆனால், இந்த நாட்டில் உள்ளவர்களைத் தரம் தாழ்த்திப் பேசுவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.தந்தை பெரியாரை யாரும் ஒதுக்கிவிட முடியாது. இருப்பினும், அவர் பெயரை பயன்படுத்திக்கொண்டு இங்குள்ளவர்களையும் இந்த நாட்டில் பின்பற்றப்படும் இந்து சமயத்தையும் குறிவைத்து தாக்குவதை ஒரு நாளும் ஜீரணித்துக்கொள்ள முடியாது.
மதத்தையும், சமயத்தையும் தவிர்த்து தந்தை பெரியார் எத்தனையோ நல்ல கருத்துகளை இந்த தமிழ் சமுதாயத்திற்கு விதைத்துச் கொள்ளவேண்டும்.தமிழ்நாட்டில் பேசுவதுபோல் இங்கே வந்து சனாதனம் என்றும் சங்கிகள் என்றும் வாய்நீட்டி முழக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது.பேராசிரியர் சுந்தரவள்ளி ஒரு கம்யூனிஸ்ட் வாதியாக இருக்கலாம். அதற்குத் தகுந்தமாதிரி பேசலாம். அதையெல்லாம் இந்த நாட்டில் வந்து பேசுவது ஏற்கத்தக்கதல்ல.
காலம் முழுவதும் ஒரு குறிப்பிட்ட மதத்தைத் தாக்குவது என்பது நியாயமாக இருக்க முடியாது. அதைக் கேட்டு நாங்களும் அமைதியாக இருக்க முடியாது. இந்த அம்மையார் இந்த நாட்டில் பெரிய சமய அமைப்புகளாக சொல்லப்படும் இந்து அமைப்புகளையும் சாடி இருப்பது கண்டிக்கத்தக்கது.மலேசிய இந்து தர்ம மாமன்றம் என்னும் இந்து அமைப்பு குறித்துதான் அந்த அம்மையார் சற்று காரசாரமாக பேசியிருக்கிறார்.
இதில் என்ன வேடிக்கை என்றால் அந்த அம்மையாரின் பேச்சு குறித்து எந்த இந்து அமைப்புகளும் வாய்திறக்காமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.ஏற்கெனவே இந்த நாட்டில் தமிழ்ப்பள்ளிகளில் சரஸ்வதி பூஜை உள்ளிட்ட சமயம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என்று மனித நேயமற்ற அமைப்பு ஒன்று அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்ததற்கு பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. அவர்களுக்கு இந்த வேளையில் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஆனால் பெரிய சமய அமைப்புகளாக இருக்கும் மலேசிய இந்து சங்கமும் மலேசிய இந்து தர்ம மாமன்றமும் எந்தளவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன என்பது கேள்விக்குறிதான்.இந்த நாட்டில் சுயநலத்தை முன்னிறுத்தி மட்டுமே செயல்படுகின்ற அமைப்புகள் இருக்கும்வரை நம் சமூகத்திற்கும், சமயத்திற்கும் எந்த கெடுதல் நடந்தாலும் இவர்கள் வாய்திறக்கமாட்டார்கள்.சரஸ்வதி பூஜை போன்ற சமயரீதியிலான பண்டிகைகள் தமிழ்ப்பள்ளிகளில் காலம் காலமாக நடத்தப்பட்டு வருகிறது. இப்போது திடீர் என்று சில மனிதநேயமற்ற அமைப்புகள் குறுக்கே வந்து இடையூறுகளும், குறுக்கீடுகளும் செய்கிறது என்றால் அதற்கு இடமளித்தது யார்?
இந்நாட்டில் இருக்கின்ற இந்து அமைப்புகள் என்ன செய்து கொண்டு இருக்கின்றன என்ற கேள்விகள் பரவலாக எழுந்து வருவதை அந்த அமைப்புகள் உண்மையிலேயே உணர்ந்து உள்ளனவா? அல்லது ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்றனவா என்ற ஐயப்பாடு எழுகின்றது.ஒரு பக்கம் சமூக நீதி பேசுவதாக கூறி சமயத்தை எள்ளி நகையாடுகின்றார்கள்.
அதை வேடிக்கை பார்க்கின்ற இந்து அமைப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன.
இந்த நாட்டில் இறையாண்மை கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதற்கு ஊறுவிளைவிக்கும் வகையில் யார் செயல் பட்டாலும், அவர்கள் மீதான நடவடிக்கைகளை அரசாங்கம் கடுமையாக்கவேண்டும்.ஒரு நாட்டில் இருந்து இந்த நாட்டிற்கு வருகை தந்து இங்கு ஒற்றுமையாக இருக்கும் மக்களை பிளவுபடுத்தும் செயலை அனுமதிக்கமுடியாது.
எனவே, இனியும் இந்த நாட்டில் மதபேதங்களுக்கும் அந்த மதத்தை இழிவுபடுத்துவதற்கும் கூட்டம் கூட்டி செயல்படுத்துவதற்கும் எந்த சட்டை போடுபவர்களாக இருந்தாலும் சரி அவர்களுக்கான கண்டனம் வலுக்கவேண்டும் என்று அரிமா எனப்படும் மலேசிய சமூக நல மறுமலர்ச்சி இயக்கத் தலைவர் ஓம்ஸ் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



