டிட்வா புயல் எங்கே இருக்கிறது? எந்த பகுதியில் கரையை கடக்கும்?

top-news
FREE WEBSITE AD

இந்தியாவில் வங்கக் கடலில் உருவான டிட்வா புயல், சென்னையை நோக்கி புயலாகவே வந்து கொண்டிருக்கிறது. இதனால் வடதமிழக மாவட்டங்களில் அதி கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறியிருப்பதாவது: வங்கக் கடலில் உருவான டிட்வா புயல், வடக்கு,வட மேற்கு திசையை நோக்கி கடற்கரைகளுக்கு இணையாக பயணித்து வருகிறது. இது இன்று நள்ளிரவு தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளை வந்தடைந்தது.

தற்போது இந்த புயலானது வேதாரண்யத்திற்கு கிழக்கே 100 கி.மீ. தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 80 கி.மீ. தொலைவிலும் புதுவைக்கு தென்கிழக்கே 150 கி.மீ. தூரத்திலும் சென்னைக்கு தெற்கே 280 கி.மீ. தொலைவிலும் இருக்கிறது.

கடந்த 6 மணிநேரத்தில் மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. புயல் நகரும்போது வடதமிழகம், புதுவை கடலோரப் பகுதிகளில் இருந்து 50 கி.மீ. தொலைவில் இன்று காலையிலும், 25 கி.மீ. தொலைவில் மாலையிலும் நிலவக் கூடும். சென்னை கடலோர பகுதிகளுக்கு அருகே இன்று மாலை வரும் என கணிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் டிட்வா புயல் கரையை கடக்காமல் கரையை தொட்டப்படியே பயணிக்கும். கரைக்கு நின்று வந்து வடகடலோர மாவட்டங்கள், புதுவையில் மழை கொட்டி வருகிறது. நேற்று இரவில் இருந்தே மழை தொடங்கிவிட்ட நிலையில் இன்றும் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வடமாவட்டங்களில் அனேக இடங்களிலும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும் திருவள்ளூர், ராணிப்பேட்டை, சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும் சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள், புதுவையில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிட்வா புயல் கரையை கடக்காததால் கரையை தொட்டப்படி கடல் பகுதியிலேயே வலுவிழந்துவிடும். இதன் பின்னர் மழையின் தீவிரம் குறையும். இந்த புயலால் மணிக்கு 55 கி.மீ. முதல் 75 கி.மீ. வரை காற்று வீசக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புயல் பாதிப்பை எதிர்கொள்ள மாநில அரசு தயாராகி வருகிறது. தேசிய மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள் வடதமிழக மாவட்டங்களில் முகாமிட்டுள்ளன. சென்னையில் வறண்ட காற்று காரணமாக தற்போது வரை பெரிய அளவிலான மழை இல்லை. மேகங்கள் குவிந்து குளிர்ந்த சூழல் உருவாகும் போது மழையின் அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *