மக்களவையின் இரண்டாவது வாரத்தில் ஆர்.எம்.கே 13 தாக்கல் குறித்து கவனம் செலுத்தப்படும்!
- Muthu Kumar
- 20 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 20-
15ஆம் நாடாளுமன்றத்தின் நான்காம் தவணைக்கான இரண்டாவது மக்களவைக் கூட்டத் தொடர் நாளை திங்கள்கிழமை தொடங்குகிறது.இக்கூட்டத்தில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டின் வளர்ச்சிக்கான இலக்குகளைக் கோடிகாட்டும் 13ஆவது மலேசியத் திட்டத்தை தாக்கல் செய்வதில் முக்கிய கவனம் செலுத்தப்படவிருக்கிறது.
இம்மாதம் 21ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை 24 நாட்களுக்கு நடைபெறவிருக்கும் இக்கூட்டத்தின் இரண்டாவது வாரத்தில் 13-ஆவது மலேசியத் திட்டம் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக மக்களவைத் தலைவர் டான்ஸ்ரீ ஜொஹாரி அப்துல் தெரிவித்தார்.
2030ஆம் ஆண்டு வரை இயல்பு,பொருளாதார, சமூக மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தி ஒருங்கிணைப்பதில் 13ஆவது மலேசியத் திட்டம், அனைத்து தரப்பினருக்கும் முதன்மை ஆவணக் குறிப்பாக விளங்குகிறது.மேலும், 13ஆவது மலேசியத் திட்டத்தை பிரதமரே தாக்கல் செய்யவிருப்பதாக அவர் கூறினார்.
இம்முறை நடைபெறவிருக்கும் கூட்டம் விவாதத்திற்கும் கலந்துரையாடலுக்கும்
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தகுந்த நேரத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் ஒரு நிபுணத்துவ அணுகுமுறையைக் கையாள்வதோடு 13ஆவது மலேசியத் திட்டத்தின் உள்ளடக்கத்தையும் மக்கள் மற்றும் தேசிய பிரச்சினைகளைப் பற்றியும் கலந்துரையாட விவாத நேரத்தைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று டான்ஸ்ரீ ஜொஹாரி அப்துல் நம்பிக்கை தெரிவித்தார்.
"விவாதத்தை மேற்கொள்வதற்கு போதுமான வாய்ப்பினை நான் வழங்குவேன். விவாதம் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்பதையும் நான் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆம், அவர்கள் அரசியல்வாதிகள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். நிலைமையை அதிகமாக அரசியல்படுத்தாதீர்கள், அவ்வாறு செய்தால், அது மிகையாகிவிடும். அரசியல் விளையாட்டை வெளியில் வைத்து கொள்ளுங்கள்.
நான் அதில் தலையிடமாட்டேன். ஆனால், மக்களவையைப் பொறுத்தவரை கண்ணியமான விவாதமாக இருந்தால் நல்லது," என்றார் அவர்.அதேவேளையில், மேலவைக் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்கி 10 நாட்களுக்கு நடைபெறும்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



