வங்காளதேசத் தொழிலாளர்களைத் தருவிப்பதில் “சிண்டிகேட்” முறையைப் பயன்படுத்தக் கூடாது!
- Muthu Kumar
- 05 Jul, 2025
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 5-
வங்காளதேசத்திலிருந்து தொழிலாளர்களைத் தருவிப்பதற்கு ஆட்சேர்ப்பு முறையை (சிண்டிகேட் முறை பயன்படுத்தக் கூடாது. அதனை அகற்றும்படி வங்காளதேசம் விடுத்துள்ள கோரிக்கையை மலேசியா காதில் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று கிள்ளான் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ நேற்று வலியுறுத்தினார்.
நடப்பில் இருக்கும் தொழிலாளர் சேர்ப்பு மீதான ஒப்பந்தத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டாலொழிய மலேசியாவுக்குத் தங்கள் குடிமக்களை அனுப்புவதற்கு வங்காளதேசம் தடை விதிக்கலாம் என்று அந்நாட்டின் புலம்பெயர் மக்கள் நலச்சேவை மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் ஆலோசகர் அசீப் நஸ்ருல் நேற்று தெரிவித்தார்.
மலேசியாவில் வேலை வாய்ப்பு பெறுவதற்காக ஒவ்வொரு வங்காளதேசத் தொழிலாளியும் இருபதாயிரம் முதல் முப்பதாயிரம் வெள்ளி வரை கட்டணமாக கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இதன் காரணமாக, மலேசியாவுக்குள் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பே அவர்கள் கடனாளியாகி விடுகின்றனர் என்று மனித உரிமைகள் மீதான ஆசியான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் இணைத் தலைவரான சந்தியாகோ சுட்டிக் காட்டினார்.
ஆட்சேர்ப்புக் கும்பல்கள் வங்காளதேச தொழிலாளர்களுக்கு இதுபோன்று பெரும் தொகையை கட்டணமாக வசூலிக்கின்றனர். தற்போதைய புரிந்துணர்வு மகஜர் இதுபோன்ற செயல்களைத் தடுத்து நிறுத்த முடியாத அளவுக்கு பலவீனமாக உள்ளன. இத்தகைய குற்றங்களைப் புரியும் நபர்களுக்கு தண்டனை விதிக்கவோ அவர்களின் லைசென்ஸுகளைப் பறிமுதல் செய்யவோ அந்த மகஜரில் வாய்ப்பளிக்கப்படவில்லை என்று சந்தியாகோ சொன்னார்.
வங்காளதேசம் மற்றும் மலேசியா இடையே இருவழி தொழிலாளர் ஒப்பந்தமொன்று கையெழுத்தாக வேண்டும் என்பதுதான் இப்போதைக்கு மிகத் தேவையான ஒரு நடவடிக்கையாகும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
இதுபோன்ற ஒப்பந்தம் இல்லாவிடில், தொழிலாளர்களைக் கடத்தும் செயல்கள் தொடர்ந்து கொண்டிருக்கும். தொழிற்சாலைகள் பண இழப்பைச் சந்தித்துக் கொண்டிருக்கும். உலக நாடுகளின் மத்தியில் மலேசியா தொடர்ந்து அவமானத்தை எதிர்நோக்க வேண்டிவரும் என்றார் சந்தியாகோ.அடுத்தாண்டில் முப்பதாயிரம் முதல் நாற்பதாயிம் வங்காளதேசிகளை மலேசியா தருவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Charles Santiago menggesa Malaysia hentikan pengambilan pekerja Bangladesh melalui sindiket. Pekerja terpaksa bayar hingga RM30,000 sebelum tiba. Bangladesh mungkin sekat penghantaran jika tiada pembaharuan perjanjian. Perjanjian dua hala diperlukan untuk elak penyeludupan dan lindungi hak pekerja.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



