தங்கள் சொந்த நுகர்வுக்காக மதுபானங்களை உரிமம் இல்லாமல் வீட்டில் சேமித்து வைக்க அனுமதிக்கப்படுகிறார்கள்- சுங்கத் துறை!
- Muthu Kumar
- 29 Aug, 2025
கோலாலம்பூர், ஆக 29:
மதுபானங்களுக்கான வரி செலுத்தப்பட்டிருக்கும் வரை, பொதுமக்கள் தங்கள் சொந்த நுகர்வுக்காக மதுபானங்களை உரிமம் இல்லாமல் வீட்டில் சேமித்து வைக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்று சுங்கத் துறை தெரிவித்துள்ளது.
உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களிலிருந்து மக்கள் தங்கள் சொந்த நுகர்வுக்காக வரி செலுத்தப்பட்ட மதுபானங்களை வாங்கினால், பதிவேட்டை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று சுங்கத்துறை தெரிவித்துள்ளதாக பெர்னாமா குறிப்பிட்டுள்ளது.ஏழு ஆண்டுகளுக்கு அத்தகைய பதிவுகளை வைத்திருக்க வேண்டிய அவசியம் உரிமம் வைத்திருப்பவர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று அது கூறியது.
தனிப்பட்ட நுகர்வுக்காக சேமிக்கப்பட்ட மதுபானங்களைப் பொறுத்தவரை, சுங்கத் துறையின் நிர்வாகச் சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பாட்டில்களின் எண்ணிக்கையில் வரம்பு இல்லை என்று அது கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டது.
இருப்பினும் இது தொடர்பாக நாடளவில் வழக்குகள் சம்பந்தப்பட்ட சில வீடுகளில் சோதனை நடத்திய பின்னர், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை வரி செலுத்தப்படாத மதுபான பாட்டில்களின் வழி RM14 லட்சத்து 20 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அது கூறியது.மேலும், வணிக நோக்கங்களுக்காக மக்கள் வீட்டில் மதுபானங்களை சேமித்து வைத்த சம்பவங்கள் நடந்துள்ளன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



