ஆட்சியைக் கவிழ்ப்பதிலேயே குறியாய் இருக்கிறார்கள்! இது அம்னோவின் துரோகம்! - அன்வார் வருத்தம்
- Shan Siva
- 13 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 13: நெகிரி செம்பிலான் மாநில அரசு பதவியேற்று மூன்றாவது ஆண்டில் மட்டுமே இருக்கும் நிலையில், அங்கு முன்கூட்டியே தேர்தல்களை நடத்துவதற்கு பக்காத்தான் ஹரப்பான் தலைவர் அன்வார் இப்ராஹிம் தனது எதிர்ப்பைத் தெரிவித்தார்.
பிரதமராகவும் இருக்கும் அன்வர், தனது அதிருப்தியை மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அமினுதீன் ஹரூனிடம் தெரிவித்ததாகவும், ஆனால் அம்னோவின் நிச்சயமற்ற தன்மையால் வேறு வழிகள் இல்லை என்றும் கூறினார்.
அம்னோவின் 14 சட்டமன்ற உறுப்பினர்கள், அமினுதீனை முதலமைச்சராக ஆதரிப்பதை முதலில் திரும்பப் பெற்று, பின்னர் மீண்டும் தங்கள் நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கினர்.
இது ஒரு அரசியல் நாடகம் என்று சிரம்பானில் நெகிரி செம்பிலான் பக்காத்தான் ஹராப்பான்தேர்தல் இயந்திரத்தைத் தொடங்கி வைத்தபோது அவர் கூறினார்.
மேலும், நெகிரி செம்பிலான் மற்றும் ஜொகூர் மாநில அரசுகளுக்கு இன்னும் ஓராண்டு காலம் இருக்கும் நிலையில், அங்கு முன்கூட்டியே தேர்தல்களை நடத்துவதற்கான அழைப்புகளுக்குப் பின்னால் உள்ள அம்னோவின் பொறுமையின்மையையும் அன்வார் விமர்சித்தார்.
சிறிது காலம் பொறுமையாக இருங்கள், பிறகு தேர்தல்களை நடத்துங்கள் என்றாலும், அரசாங்கத்தைக் கவிழ்த்து விடுவதில் அவர்கள் குறியாக இருக்கிறார்கள். இங்கே பொறுமை என்பதே இல்லை என்று கூறிய அவர், குறைந்தபட்சம் அடுத்த தேர்தல்கள் வரையாவது ஒற்றுமை உணர்வு பேணப்பட்டிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இந்த முறை பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான அரசாங்கத்திற்கு தங்கள் ஆணையை வழங்குமாறு நெகிரி செம்பிலான் வாக்காளர்களை அன்வார் வலியுறுத்தினார்.
மாநிலத்தின் எதிர்காலம் பெரும் செல்வந்தர்களுக்கு மட்டுமல்ல, தொழிலாளர்கள், சிறு விவசாயிகள், நடைபாதை வியாபாரிகளுக்குமானது என்று அன்வார் கூறினார்.
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம் ஜூன் 4-ஆம் தேதி கலைக்கப்பட்டது. இதனை அடுத்து ஆகஸ்ட் 1-ஆம் தேதியை அங்கு தேர்தல் நாளாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த மாதம், அம்னோ-பாரிசான் நேஷனல் கட்சியைச் சேர்ந்த 14 சட்டமன்ற உறுப்பினர்களும நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் அமினுதீனுக்கான தங்கள் ஆதரவைத் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, பல வாரங்களாக அரசியல் பதற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அம்னோவின் மத்திய தலைமை, மாநில அரசுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்குமாறு அதன் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டது. ஆனால், பக்காத்தான் மற்றும் அம்னோ ஆகிய இரு கட்சிகளின் தலைவர்களும், சட்டமன்றத்தைக் கலைப்பதே மிகத் தெளிவான தீர்வு என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்தனர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



