தலைமுடியை விட மெல்லிய கணினி சிப்பை கண்டுபிடித்த சீனா - 15 டன் எடையையும் தாங்குமாம்!

top-news
FREE WEBSITE AD

சீனாவின் ஃபுடான் பல்கலை. ஆராய்ச்சியாளர்கள் உலகையே வியக்க வைக்கும் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.பொதுவாக கணினி சிப்கள் என்றாலே சதுர வடிவில் கடினமானதாக இருக்கும். ஆனால், இப்போது மனித முடியை விட மெல்லிய நூலில் இயங்கும் கணினி சிப்பை உருவாக்கிச் சாதனை படைத்துள்ளனர்.

ஜப்பானிய உணவான 'சுஷி ரோல்' தயாரிக்கும்போது, அதன் அடுக்குகளை எப்படிச் சுருட்டி வைப்பார்களோ, அதே பாணியில் மின்சுற்றுகளை அடுக்குகளாக அமைத்து, பின் அவற்றை மிக மிக மெல்லிய நூலாகச் சுருட்டியுள்ளனர். இதற்கு FIC (Fiber Integrated Circuit) எனப் பெயரிட்டுள்ளனர். இதன் விட்டம் வெறும் 50 மைக்ரோமீட்டர் மட்டுமே. அதாவது, நம் தலைமுடியின் தடிமனை விட இது குறைவு. இது மெல்லிய நூலாக இருந்தாலும், 15.6 டன் எடையுள்ள ஒரு கன்டெய்னர் லாரி இதன் மேல் ஏறிச் சென்றாலும் இது உடையாது. மேலும், 10,000 முறை வளைத்தாலும் பழுதடையாது.

1 மீட்டர் நீளமுள்ள இந்நூலில் 1 கோடி டிரான்சிஸ்டர்கள் உள்ளன. இது 1990-களில் நாம் பயன்படுத்திய பென்டியம் III கணினி பிரவுஸர்களுக்கு இணையான வேகம் கொண்டது. சாதாரண நூலைப் போலவே இதையும் இழுக்கலாம், முறுக்கலாம். இதனால், நாம் அன்றாடம் அணியும் சட்டையிலேயே இந்தச் சிப்பை வைத்துத் தையல் போட முடியும். எதிர்காலத்தில் நாம் அணியும் சட்டையே நம் இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றைச் சொல்லும். இது சாதாரணத் துணி போலவே இருக்கும்.

விர்ச்சுவல் ரியாலிட்டி விளையாடும்போது, கடினமான கையுறைகளுக்குப் பதில் சாதாரணத் துணி கையுறைகளை அணிந்தே விளையாடலாம். இது மனித மூளையின் திசுக்கள் போலவே மென்மையாக இருப்பதால், பக்கவாதம் போன்ற பாதிப்புகளுக்குச் சிகிச்சையளிக்க மூளை-கணினி இடைமுகக் கருவிகளில் (Brain-Computer Interface) இதைப் பயன்படுத்தலாம். வெகு விரைவில், நாம் அணியும் சட்டைகளே ஒரு ஸ்மார்ட்போனைப் போலவோ அல்லது கணினியைப் போலவோ செயல்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்பதை இந்தச் சீன ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்து உள்ளனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *