கூட்டணி குறித்து டிடிவி தினகரன் பரபரப்பு அறிவிப்பு!

top-news
FREE WEBSITE AD

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகையை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வைக்கப்பட்ட வரவேற்பு பேனர்களில் இருந்து, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.

தினகரனின் புகைப்படம் திடீரென அகற்றப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஜனவரி 23-ஆம் தேதி நடைபெறவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பொதுக்கூட்டத்திற்காக வைக்கப்பட்ட இந்தப் பேனரில், பிரதமர் மோடியுடன் தினகரனின் படமும் இடம் பெற்றிருந்தது. இது அமமுக பாஜக கூட்டணியில் இணைந்துவிட்டதைக் குறிப்பதாகக் கருதப்பட்ட நிலையில், சில மணி நேரங்களிலேயே அவரது படம் நீக்கப்பட்டது பல்வேறு விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து விளக்கமளித்த டி.டி.வி. தினகரன், பாஜக நிர்வாகி வினோஜ் பி செல்வம் தன் மீதுள்ள அன்பின் காரணமாக ஆர்வத்தில் அந்தப் பேனரை வைத்திருப்பார் என்றும், இது தொடர்பாக கமலாலயத்தில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை தான் எதையும் கூற முடியாது என்றும் தெரிவித்தார். ஒரு தனிநபர் ஆர்வத்தில் செய்த செயலுக்குத் தான் பொறுப்பேற்க முடியாது எனக் குறிப்பிட்ட அவர், கூட்டணியைப் பொறுத்தவரை அந்தந்தக் கட்சிகளின் தலைமைதான் முறையான அறிவிப்பை வெளியிடும் என்று தெளிவுபடுத்தினார்.

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கணக்குகள் தீவிரமடைந்து வரும் நிலையில், தினகரனின் இந்தப் பேனர் விவகாரம் முக்கியத்துவம் பெறுகிறது. தங்களது கட்சி ஒரு ‘அணில்’ போலச் சிறியதாக இருந்தாலும், தமிழகத்தில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்று தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உரிய நேரத்தில் கூட்டணி குறித்த முடிவை அறிவிப்போம் என்று அவர் கூறியுள்ள நிலையில், அமமுகவின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் களத்தில் எழுந்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *