இது இராஜதந்திர அவமானம்! - டிரம்ப் மீது PKR குற்றச்சாட்டு
- Shan Siva
- 14 Apr, 2026
கோலாலம்பூர், ஏப் 14: அமெரிக்கா மற்றும் ஈரான் சம்பந்தப்பட்ட அதிகரித்து வரும் இராணுவப் பதட்டங்களுக்கு எதிரான போப் லியோ XIV-ன் கொள்கை ரீதியான நிலைப்பாட்டைப் பாராட்டியுள்ள PKR-ன் சர்வதேச விவகாரங்கள் பணியகம், அவருக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
போர் முழக்கங்களுக்கு மத்தியில், நிதானத்தைக் கடைப்பிடிக்கவும் மனித உயிரின் புனிதத்தைக் காக்கவும் போப் விடுத்த அழைப்பை,
PKR-ன் சர்வதேச விவகாரங்கள் பணியகம் தலைவர் டாக்டர் மஸ்லீ மாலிக் பாராட்டினார்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவருக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட பதிலடியை தாங்கள் அவமதிப்பாகவே கருதுவதாக மஸ்லீ கூறினார்.
இது ராஜதந்திர ஒழுக்கக்கேட்டின் உச்சகட்டம் என்று மஸ்லீ இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.
திருச்சபை தனது கருத்துக்களைத் தனது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் மட்டுப்படுத்த வேண்டும் என்ற டிரம்பின் கோரிக்கை, மத சுதந்திரம் மற்றும் தார்மீக சுதந்திரத்தின் மீதான ஒரு தாக்குதல் என்றும் அவர் மேலும் கூறினார்.
போரை நியாயப்படுத்த மதத்தைப் பயன்படுத்தக்கூடாது என்று திருத்தந்தை உலக சமூகத்திற்குச் சரியாக நினைவூட்டியுள்ளார் என்று அவர் கூறினார்.
டிரம்பின் எதிர்வினையானது, 130 கோடி கத்தோலிக்கர்களுக்கு மட்டுமல்ல, அமைதியை மதிக்கும் மனசாட்சியுள்ள அனைத்து மக்களுக்கும் ஒரு அவமானம் என்று அவர் கூறினார்.
உடனடியாகப் பதற்றத்தைத் தணித்து, பலதரப்பு ராஜதந்திரத்திற்குத் திரும்புவதற்கான வத்திக்கானின் வேண்டுகோளுக்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்க வேண்டும் என்றும் மஸ்லீ மாலிக் அழைப்பு விடுத்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



