தைப்பூசத் திருவிழா – வரலாறும் வாழ்வியல் தத்துவமும்

top-news
FREE WEBSITE AD

ஜனவரி 31

மலேசியாவில் தைப்பூசத் திருவிழா, கோலாலம்பூர் பத்துமலை முருகன் கோவில் , பினாங்கு தண்ணீர் மலை பாலதண்டாயுதபாணி கோயில், ஈப்போ கல்லுமலை அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோயில்,  சுங்கைப்பட்டாணி சுப்ரமணியர் கோவில்களில் மிக விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் பால் குடம் ஏந்தியும், அலகு குத்தியும், காவடிகள் ஏந்தியும்  முருகப் பெருமானை இந்நாளில் மனமுருகி பக்தி பரவசத்தோடு வழிப்படுகின்றனர்.


*மலேசியாவின் மூன்று படைவீடுகளில் தற்பொழுது சுங்கைப்பட்டாணி கோயிலும் சேர்ந்துக் கொண்டது எனலாம். தமிழகத்தில் முருகப்பெருமானுக்கு ஆறுபடைவீடுகள் அமைந்துள்ளதைப் போல், மலேசிய நாட்டிற்கு மூன்று படைவீடுகள் பத்துமலை, தண்ணீர்மலை, கல்லு மலை என்பனவற்றைக் குறிக்கிறது. 


இத்தைப்பூசத் திருவிழாவில்  தமிழர்கள் மட்டுமன்றி  சீனர்களும் அதிக அளவில் கலந்துக் கொண்டு வழிபாடு செய்வது சிறப்புக்குரியது. இந்தியாவை அடுத்து பல்லின மக்கள் வாழும் மலேசியா போன்ற ஒரு நாட்டில் சீனர்களும் தைப்பூசத்தைக் கொண்டாடி வருகின்றனர். மலேசியாவில் அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் புகழ்பெற்றதாகவும், உலக அளவில் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயமாகவும் திகழ்வது, கோலாம்பூரில் அமைந்துள்ள பத்துமலை முருகன் திருத்தலமே. பத்துமலை சுண்ணாம்புக் கற்கல் ஊசிப்பாறைகள் கொண்டு உருவான இயற்கையானக் குகையாகும். இந்த மலையின் வயது நாற்பதுகோடி ஆண்டுகள் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பத்துமலை என்ற பெயர், பத்துமலை அருகே ஓடும் பத்து என்ற ஆற்றின் பெயரால் உருவாகியது.  


இவ்வாலயம் சுமார் 127 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. 1891-ம் ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த கே. தம்புசாமி பிள்ளை இத்திருத்தலத்தை தோற்றுவித்தார். பத்துமலைக் குகையில் முருகனின் வேலை வைத்து, தனது முதல் வழிபாட்டைத் தொடங்கினார் தம்புசாமிபிள்ளை. 1892-ல் பத்துமலையில் முதல் தைப்பூசம் கொண்டாடப்பட்டது. 100 மீட்டர் அடி உயரத்தில் இருக்கும் இக்குகையின் உள்ளே மயிலின் மீது அமர்ந்தப்படி காட்சித் தரும் வேலவனைக் காண 272 படிக்கட்டுகளை ஏறி செல்ல வேண்டும். தற்போது பத்துமலையில் விண்ணை முட்டும் அளவில் கம்பீரமாகக் காட்சித் தரும் தங்க நிறத்திலான 140 அடி உயரமுள்ள முருகன் சிலை 2006 ஆம் ஆண்டு ஜனவரி 29 அதிகாரப்பூர்வமாக பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த துன் சாமிவேலு அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. பத்துமலை அடிவாரத்தில் கண்கவரும் கலைக்கூடம் வள்ளுவர் கோட்டம் இராமாயண குகை என அனைத்தும் மிக அழகாக நிறுவப்பட்டுள்ளது. இந்த முருகன் சிலை 1550 கன மீட்டர் சிமென்ட், 250 டன் எக்கு கம்பிகள் தாய்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்டு 300 லிட்டர் தங்கக் கலவையைக் கொண்டு உருவாக்கப்பட்ட முதல் முருகன் சிலை என அறியப்படுகிறது. தொடக்கத்தில் 3 நாள்கள் மட்டுமே கொண்டாடப்பட்ட தைப்பூசம் 1980களுக்குப் பின்னர் 5க்கும் மேற்பட்ட நாள்கள் கொண்டாடப்பட்டு தற்போது 7 நாள்கள் வரையும் கொண்டாடப்பட்டு வருகிறது. தைப்பூசத்தின் முதல் நாள் கோலாலம்பூர் கோர்ட்டு மலை  ஸ்ரீ மகா  மாரியம்மன் ஆலயத்திலிருந்து 21 அடி உயர தங்க ரதம் கோலாலம்பூரின் முதன்மை சாலைகளில் பயணித்து பத்துமலையை வந்தடையும்.


பத்துமலையை அடுத்து தனித்துவமாகத் தைப்பூசத்தைக் கொண்டாடும் ஒரு மாநிலமாகப் பினாங்கு திகழ்கிறது. பினாங்கு தண்ணீர்மலை : பினாங்கு தண்ணீர்மலை : மலேசிய நாட்டின் தனித்தீவு நகரம் பினாங்கு. மலாக்கா நீரிணையில் அமைந்த நிலப்பகுதி. இதன் தலைநகரம் ஜார்ஜ் டவுன். இங்குதான்  தண்ணீர்மலை முருகன் ஆலயம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. சோழமன்னன் வென்ற கடாரம் என்ற ஊர், இத்தீவின் அருகேயுள்ள கெடா  மாநிலத்தில் அமைந்துள்ளது. நகரத்தார் அதிகம் வாழும் பகுதியாக பினாங்கும், கோலாலம்பூரும் திகழ்கின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் நகரத்தார் தங்களுக்கென தனி பாலதண்டாயுதபாணி ஆலயத்தை எளிமையாகத் தொடங்கி, ஐந்து ஏக்கர் நிலபரப்பில் தண்ணீர்மலை அடிவாரத்தில் தனி ஆலயம் அமைத்துள்ளனர். இதுதவிர, இவர்கள் காலத்தில் தண்ணீர்மலை அடிவாரத்தில் வழிபட்டு வந்த வேல், இன்று தண்ணீர்மலையின் உச்சியில் அமைந்து, ஆன்மிகப் புகழ் பரப்பிக் கொண்டிருக்கிறது. மலை உச்சியில் கொடிமலை முருகன் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.அதன்பிறகு பல ஆண்டுகளுக்குப் பிறகே தண்ணீர்மலை முருகன் கோவில் பெரிய அளவில் வெளியே தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்து அறப்பணி வாரியம் புதிய கோவில் கட்ட முன்வந்தது. மலையின் இடைப்பகுதியில் இருந்த முருகன் ஆலயம், புதிய முயற்சியின் பயனால், மலையுச்சி பகுதி தேர்வு செய்யப்பட்டு, ஐநூறுக்கும் மேற்பட்ட படிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது. இத்திருத்தலம் ஏழுநிலை ராஜகோபுரம் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.


ஈப்போ கல்லுமலை : மலேசிய நாட்டின் தலைநகரான கோலாம்பூரில் இருந்து வடக்கே சுமார் 200 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள முக்கிய நகரம் ஈப்போ. பேராக் மாநிலத்தின் தலைநகரான ஈப்போ. கோடீஸ்வரர்களின் பூமி என்ற அடைமொழியால் வழங்கப்படுகிறது. கிந்தா என்ற நதியும், சுங்கை பிங்கி, சுங்கை பாரி என்ற துணைநதிகளும் பாயும் ஊர் இது. சுண்ணாம்புக் குன்றுகள் நிறைந்த நகரம். வெள்ளி அதிக அளவில் வெட்டி எடுக்கப்பட்ட பூமியும் இதுவே.


இங்கே மிகவும் பழைமையான சுப்பிரமணியர் ஆலயம், சென்ரோ மலைக்குகையில் இருந்து வந்தது. கி.பி. 1889-ல் நிலச்சரிவு விபத்தால் மலையடிவாரத்திற்கு கி.பி. 1930-ல் இடம் பெயர்ந்த இவ்வாலயம், இன்று கம்பீரமாய் எழுந்து நிற்கிறது. இவ்வாலயத்தில் தைப்பூசம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்து, அலகுக் குத்தி, காவடி எடுத்து நேர்த்திக் கடன்களைச் செலுத்துகின்றனர். ஆலயம் கிந்தா நதிக்கரையருகில் ஏழுநிலை ராஜகோபுரத்துடன் ஏழு கலசங்களைத் தாங்கி பிரம்மாண்டமாய் காட்சியளிக்கிறது. உள்ளே விசாலமான பிரகாரம், நடுவில் பிரம்மாண்ட முன்மண்டபம் அமைந்துள்ளது. விநாயகர், அம்மன், நடராஜர் சபை, அரச மரத்தடி விநாயகர், தட்சிணாமூர்த்தி, பைரவர் சன்னிதிகள் ஒருங்கே அமைந்துள்ளன. மயில்கள் நிறைந்த தனிப்பகுதியும் இருக்கிறது. ஆலயத்தின் நடுப்பகுதியில், கல்லுமலை சுப்பிரமணியர், திருச்செந்தில் நாதனின் மறுவடிவமாக சிரித்த முகத்துடன் காட்சி தருவது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. இவரே ஈப்போ மக்களை காத்தருளும் இறைவன். ஈப்போ நகரில் குனோங்கிலோ பகுதியில், ஜாலான் ராஜா மூசா அசீஸ் சாலையில் கல்லுமலையின் அடிவாரத்தில், கிந்தா நதிக்கரையோரம் பிரம்மாண்டமாய் அமைந்துள்ளது.  இவ்வாலயத்தின் வளர்ச்சிக்கு துன் வீ.தி. சம்பந்தன் டான்ஸ்ரீ வெ. மாணிக்கவாசகம் பெரும் பங்காற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


சுங்கை பட்டாணி ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி ஆலயம் : மலேசியாவின் கெடா மாநிலத்தில் அமைந்துள்ள முக்கியமான ஆலயங்களுள் சுங்கை பட்டாணி நகர மத்தியில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி ஆலயமும் ஒன்றாகும். இந்த ஆலயமும் நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்டது.

1914-ம் ஆண்டு ஆதீனம் அண்ணாசாமி பிள்ளை அவர்களால் இந்த ஆலயம் உருவாக்கப்பட்டது. 1924-ல் முதல் குடமுழுக்கு நடைபெற்றது. இந்த ஆலயம் தற்போது இருக்கும் இடத்தில் இதற்கு முன்னர் ஒரு நீதிமன்றம் இருந்துள்ளது. ஆலயம் நிறுவப்பட்டு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த நிலத்தை அரசாங்கத்திடமிருந்து வாங்கி பெரிய ஆலயமாகக் கட்டுவதற்கு ஆதீனம் அண்ணாசாமி பிள்ளை ஆவன செய்துள்ளார். ஆதீனம் அண்ணாசாமி பிள்ளையின் மகனான அமரர் அ.சுப்பிரமணியம் ஜே.பி 1940 தொடங்கி 1999 வரை சுமார் அறுபது வருடங்கள் ஆலயத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றினார். மே 12, 1997 அன்று ஆலயத்திற்கு அருகிலேயே தற்காலிக ஆலயம் அமைக்கப்பட்டுப் பாலாலய குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.

லண்டன் முருகன் : இந்தியாவில் செதுக்கப்பட்ட முருகன் சிலை லண்டனுக்கு தவறுதலாக அனுப்பப்பட்டு விட்டதாகவும், பின்னர் அது மீண்டும் இவ்விடத்திற்கு வந்து சேர்ந்ததால் லண்டன் முருகர் என்ற பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது. ஆலயத்தின் ராஜகோபுரம் ஐந்து நிலை கோபுரமாக நிறுவப்பட்டுள்ளது. கோபுரத்தின் வலதுபுறத்தில் எட்டுக் கரங்களோடு விநாயகரின் சிற்பமும், இடது புறத்தில் வேல் தாங்கிய முருகன் சிலையும்  ஆலயத்தின் உள் பிரகாரத்தின் மேலே முருகன் வரலாறு சுதை சிற்பமாகவும் செதுக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் நடுவே முருகப்பெருமானின் கருவறை அமைந்துள்ளது. கையில் தண்டம் ஏந்தி இடது கையைத் தொடை மீது வைத்தபடி மூலவர் முருகப்பெருமான் காட்சியளிக்கிறார்.  உற்சவர் திருவுருவம் தைப்பூசத்தின் போது தேரில் வலம் வருகிறது.


ஆலயத் திருவிழா : முருகனுக்குத் தைப்பூசத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முதல் நாள் செட்டிபூசம் என்று அழைக்கப்படுகிறது. மூன்றாம் நாளில் முருகப்பெருமான் வெள்ளி ரதம் ஏறி சுங்கை பட்டாணி நகரை வலம் வருகின்றார். தைப்பூசத் திருவிழாவில் ஒன்றிலிருந்து மூன்று மில்லியன் மக்கள் வரை கலந்து கொள்கின்றனர். தமிழர்களுக்கு இணையாக சீனர்களும் காவடிகளும் பால்குடங்களும் தூக்கி நேர்த்திக்கடன் செலுத்துவது இத்திருவிழாவின் கூடுதல் சிறப்பாகும். தைப்பூசத்திற்கு காவடி தூக்கும் பக்தர்கள் ஆலயத்திற்கு அருகில் இருந்தும், ஆலயத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள முனீஸ்வரன் ஆலயத்திலிருந்தும் தூக்கிக் கொண்டு வருகின்றனர். தைப்பூசத்தோடு சேர்த்து முருகனுக்குரிய ஏனைய திருவிழாக்களும் (வைகாசி விசாகம் போன்றவை) சிறிய அளவில் ஆலயத்தில் கொண்டாடப்படுகின்றன.


பல காலங்களுக்கு முன்பு ஒரு தனிநபராலோ அல்லது கூட்டு முயற்சியினாலும் உருவகம் பெற்று இயங்கி வந்த முருகப் பெருமானின் தலங்கள், இன்றைய சூழலில் மக்களின் பேராதரவைப் பெற்று அனைவராலும் கொண்டாடப்படுகின்ற பெருவிழாவாக உறுவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கதுஆலய நிர்வாக குழு இணைந்து தைப்பூசத்தைச் சிறப்பாக நடத்தியது போக இன்று மக்கள் பலரும் ஒன்று சேர்ந்து கொண்டாட்டத்தை மேலும் மெருகேற்றுவது பாராட்டுதலுக்குரியது.


குப்பைகளைச் சுத்தம் செய்வது, அன்னதானம் வழங்குவது, படியேற முடியாத வயது முதிர்ந்தவர்களுக்கு உதவுவது, மாற்றுத் திறனாளிகளை படியேற்றி தூக்கிச் செல்வது என இயக்கங்கள் சார்ந்தும், தனிமனித அடிப்படையிலும் உதவிக்கரம் நீட்டுவது மனிதாபிமான அடிப்படையில் மட்டுமன்று, முருகனுக்குச் செலுத்தும் பக்தியின் அடிப்படையிலும்தான் என்பதை உணர வேண்டியுள்ளதுஇதுபோன்ற சமய விழாக்கள் எப்பொழுது வெகுஜன மக்களின் வாழ்வியலின் அங்கத்துவமாக மாறுகிறதோ அன்றே சமய விழா மட்டுமன்று மனித மான்பும் செழிப்புறும் என்பது திண்ணம்.

மனிதம் வளர்க்க, மாண்புகள் சிறக்க, தைப்பூசம் உறுதுணையாக முருகப் பெருமான் அருளட்டும்.   

ARTICLE BY - MR.SUREN

photo credit to R.PRAKASH 01126220119 FACEBOOK


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *