அரசு ஊழியருக்கு இடையூறு செய்ததாக ஜோடிக்கப்பட்ட வழக்கில் ஓம்ஸ் பா.தியாகராஜன் நிரபராதி என தீர்ப்பு!
- Thinagaren Sanggaren
- 30 Sep, 2025
கிள்ளான், செப் 30: கடந்த 2017 ஆம் ஆண்டு ஷா ஆலம் நகராண்மைக் கழகத்தின் அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் இடையூறு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவரும், மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநருமான ஓம்ஸ் பா.தியாகராஜன் குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு கடந்த 8 ஆண்டுகளாக ஷா ஆலம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், ஓம்ஸ் பா.தியாகராஜனுக்கு எதிரான இந்த வழக்கிலிருந்து
அவரை முழுமையாக விடுதலை செய்வதாக
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு, ஜூன் 6 ஆம் தேதி, நண்பகல் 12.30 மணிக்கு ஷா அலாம் செக்ஷன் 25இல் உள்ள மயூரி உணவகத்தின் வாகனம் நிறுத்துமிடத்தில் அரசு ஊழியரின் பணிக்கு
இடையூறு ஏற்படுத்தியதாக ஓம்ஸ் பா.தியாகராஜனுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
இதனை அடுத்து, கடந்த 2021 ஆம்
ஆண்டு, மார்ச் 25 ஆம் தேதி, ஷா ஆலம்
நீதிமன்றம் ஷா ஆலம் நகராண்மைக் கழகத்தின் அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் இடையூறு
விளைவித்ததன் பின்னணியில் ஓம்ஸ் பா
தியாகராஜன் இருப்பதாகக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து, அவருக்கு 6 மாதச் சிறை தண்டனையும் RM 8,000
அபராதமும் விதித்தது.
இந்நிலையில் அபராதத்தை
முழுமையாகச் செலுத்தி தாம் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க மேல்முறையீடு செய்தார் ஓம்ஸ் பா.தியாகராஜன்.
அந்த மேல்முறையீட்டில் அரசு
ஊழியருக்கு இடையூறு செய்ததாகக் கூறப்படும்
சமயத்தில் சம்பவ இடத்தில் தாம் இல்லை என்பதை ஓம்ஸ் பா. தியாகராஜன் நீதிமன்றத்தில்
முறையிட்டு தமக்கு ஜாமின் வழங்குமாறு கோரிக்கை வைத்தார். ஆனால், ஜாமின் நிராகரிக்கபட்டது.
பின்னர் நீதிமன்ற விசாரணையின்
போது 2022 அக்டோபர் 28 ஆம் தேதி ஷா ஆலம் உயர்நீதிமன்றம் அவருக்கு 6 மாதச் சிறை தண்டனை விதித்தது. அவரின்
தண்டனையை நிறுத்தி வைக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதனை அடுத்து நவம்பர் 21 ஆம் தேதி வரை அவர் காஜாங் சிறையில்
தண்டனைக்குள்ளனார்.
இந்நிலையில் ஓம்ஸ் பா.
தியாகராஜன் தனக்கு எதிரான வழக்கில் தாம் குற்றமற்றவர் என நிரூபிக்க மேல்முறையீட்டு
நீதிமன்றத்தில் கோரிக்கை மனு வழங்கினார்.
பின்னர் 2022 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி ஓம்ஸ் பா. தியாகராஜனின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் அவரின் 6 மாதச் சிறைத் தண்டனையை நிறுத்தி மேல்முறையீட்டுக்கு அனுமதி
அளித்து அவருக்கு ஜாமீன் வழங்கியது.
இதனைத் தொடர்ந்து
மேற்கொள்ளப்பட்டு வந்த வழக்கு விசாரணையில், ஓம்ஸ் பா.தியாகரஜனின்
மேல்முறையீட்டுக் கோரிக்கையை முழுமையாக விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் ஓம்ஸ் பா தியாகராஜனுக்கு எந்த வகையிலும்
தொடர்பு இல்லை எனத் தெரிவித்து, இந்த வழக்கிலிருந்து அவரை முழுமையாக விடுதலை செய்வதாக அறிவித்தது.
இது குறித்து கருத்துத்
தெரிவித்த ஓம்ஸ் பா.தியாகராஜன் சத்தியம் வெல்லும் என்பதற்கு இணங்க இந்த வழக்கில்
தாம் நிரபராதி என நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இருப்பினும் தனக்கான தண்டனை, தாம் சந்தித்த அழுத்தங்கள் சாதாரண ஒரு குடிமகனுக்கு
நேர்ந்திருந்தால் அவர் என்ன செய்வார்? என அவர் கேள்வி எழுப்பினார்.
ஒரு சிலரின் தவறான நோக்கத்தால்
நீதிக்குத்தான் அவமானம் ஏற்படுகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வேளையில், தனக்காகப் பாடுபட்ட, வேண்டிக்கொண்ட, வாதிட்ட
அனைத்து உள்ளங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக அவர் கூறினார்.
இது குறித்த விரிவான விளக்கத்தை ஊடகவியலாளர் சந்திப்பில் தாம் தெரிவிக்கவிருப்பதாக அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



