பெர்சத்துவின் தேர்தல் பணத்தை யாரிடம் கொடுத்தீர்கள்?- சனுசி கேள்வி!
- Muthu Kumar
- 19 Sep, 2025
கோலாலம்பூர், செப். 19-
நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில், கெடாவில் பாஸ் கட்சியின் தேர்தலுக்காக செலவிடப்பட்ட பணம் "சொந்தப் பணமாகும். மாறாக, பெர்சத்து கட்சி ஒரு காசுகூட கொடுக்கவில்லை என்று கூறி, அதன் தொடர்பிலான பெர்சத்துவின் குற்றச்சாட்டை கெடா மந்திரி பெசார் சனுசி நோர் நிராகரித்துள்ளார்.
"மைலோ டின்" மற்றும் தேர்தல் நன்கொடை மூலம் கிடைத்த பணத்தைத்தான் கெடா பாஸ் தனது தேர்தலுக்காகப் பயன்படுத்தியதாக, பாஸ் கட்சியின் தேர்தல் இயக்குநருமான சனுசி கூறியுள்ளார்."பெர்சத்து கொடுத்ததாகக் கூறியுள்ள தேர்தல் பணம் யாரிடம் கொடுக்கப்பட்டது என்பதை அவர்களிடமே கேளுங்கள். அதை நானும் தெரிந்து கொள்ள விரும்புகின்றேன்" என்று, அவர் கூறியுள்ளார்.
பதினைந்தாவது பொதுத் தேர்தலின்போது, பாஸ் கட்சிக்கு குறிப்பாக கெடா மாநில பாசுக்கு தேர்தல் பணம் கொடுக்கப்பட்டதாக, பெர்சத்து தலைவர் முஹிடின் யாசினின் முன்னாள் மூத்த அதிகாரி ஒருவர் கூறியிருப்பது குறித்து கருத்து தெரிவித்தபோது, சனுசி இதனை நேற்று தெரிவித்தார்.
"கெடாவில் நாங்கள் எங்களின் சொந்தப் பணத்தைப் பயன்படுத்தினோம். மாநில பெர்சத்து கட்சியின் வேட்பாளர்களுக்கான பொருள்களுக்கும் நாங்கள்தான் பணம் செலுத்தினோம். அவர்களில் ஒரு வேட்பாளர் மட்டுமே நாங்கள் கொடுத்த பணத்தை எங்களிடம் திருப்பித் தந்தார்" என்று அவர் கூறினார்.
பெர்சத்து சுட்சியிடமிருந்து தேர்தல் பணம் வழங்கப்பட்டதன் காரணத்தினால்தான், 2022ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி நடந்த 15ஆவது பொதுத் தேர்தலில் பாஸ் கட்சி அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற முடிந்தது என்று, முஹிடினின் முன்னாள் அந்தரங்கச் செயலாளர் மர்சுக்கி முஹமட் சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.
பெர்சத்து கட்சியின் தயவினால், பெரிக்காத்தான் நேஷனல் மூலம் அனைத்து தேர்தல் தளவாடப் பொருட்களையும் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டதன் காரணத்தினால்தான், பெரிக்காத்தான் சின்னத்தில் போட்டியிட்டபோது தேர்தல் செலவில் பாஸ் கட்சி பெரிய அளவில் பிரச்சினையை எதிர்நோக்கவில்லை என்றும் மர்சுக்கி கூறியிருந்தார்.
அதோடு, அப்போது பாஸ் கட்சிக்கு வழங்கப்பட்ட தேர்தல் பணம் "சிறிய தொகையுமல்ல" என்று கூறியிருந்த மாசுக்கி, "அதன் பலனாகவே, அத்தேர்தலில் பாஸ் கட்சியினால் 43 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றிபெறவும் முடிந்தது. தனது 70 ஆண்டுகள் அரசியல் சரித்திரத்தில் பாஸ் கட்சி இவ்வளவு அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பதும் இதுவே முதல் தடவையுமாகும்" என்று தமது முகநூல் கணக்கில் பதிவேற்றம் செய்துள்ள ஒரு செய்தியில் மாசுக்கி குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இது குறித்து கருத்து கேட்டபோது, "கருத்துக்கூற வேண்டியதில்லை. அனைத்து உறுப்புக் கட்சிகளிடமும் பணம் இருக்கிறது” என்று மட்டும் பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் சுருக்கமாக பதிலளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



