எங்களின் பிரதமர் வேட்பாளர் யார்? தெரிந்து கொள்ள விரும்பினால் பெரிக்காத்தானில் சேருங்கள்- ஜசெக எம்பிக்கு ஹம்ஸா பதில்!
- Muthu Kumar
- 14 Oct, 2025
கோலாலம்பூர், அக். 14 -
பெரிக்காத்தான் நேஷனலின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஹம்ஸா ஸைனுடின் பதிலளித்த பின்னர் மக்களவையில் நேற்று சிறு சலசலப்பு ஏற்பட்டது.
மத்திய அரசாங்கத்தைக் கைப்பற்றி ஆட்சிக்கு வந்தால் பிரதமராக யாருடைய பெயரை பெரிக்காத்தான் நேஷனல் குறிப்பிடும் என்றும் இதை தெரிந்து கொள்ள வாக்காளர்களுக்கு உரிமை இருக்கிறது என்றும், ஹம்ஸாவிடம் பக்காத்தான் ஹராப்பானின் கோத்தா மலாக்கா ஜசெக எம்பி கூ போயே தியோங் கேட்டார்.
தொடக்கத்தில் அக்கேள்வியை நிராகரித்த ஹம்ஸா, பின்னர் அதற்கு பதிலளித்தபோது, “அவர் யார் என்பதை உண்மையிலேயே நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், பெரிக்காத்தான் நேஷனலைச் சேர்ந்த அனைத்து எம்பிக்களுக்கும் அது தெரியும். கோத்தா மலாக்கா அதை தெரிந்து
கொள்ள விரும்பினால், அவர் பெரிக்காத்தான் நேஷனலில் சேரவேண்டும்.
“அவர் யார் என்பதை கோத்தா மலாக்காவிடம் நான் தெரிவித்தாலும், அவர் எங்களுக்கு வாக்களிக்கவும் போவதில்லை” என்று, மக்களவையில் நேற்று திங்கள்கிழமை நடந்த 2026ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் விநியோகம் மீதான விவாதத்தின்போது ஹம்ஸா பதிலளித்தார்.
நாட்டின் 16ஆவது பொதுத் தேர்தலுக்கான பெரிக்காத்தான் நேஷனலின் பிரதமர் வேட்பாளர் குறித்த கேள்வி அக்கூட்டணியின் உறுப்புக் கட்சிகள் மத்தியில் ஒரு சர்ச்சைக்குரிய விசயமாகவே இருந்து வருகிறது. பெரிக்காத்தானின் அதிகாரப்பூர்வத் தேர்வாக பெர்சத்து கட்சித் தலைவர் முஹிடின் யாசின் இருக்கின்றார் என்று அக்கட்சி உறுதிப்படுத்திய போது, பாஸ் கட்சியின் ஆன்மிகத் தலைவர் ஹஷிம் ஜாசின் கடந்த நவம்பரில் அதை முற்றாக நிராகரித்திருந்தார்.
அதோடு, பாஸ் கட்சிதான் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியை வழிநடத்த வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். எனினும், பெர்சத்து மற்றும் கெராக்கானைச் சேர்ந்த பல தலைவர்கள், பெரிக்காத்தானின் பிரதமர் வேட்பாளராக முஹிடினையே இன்னமும் தொடர்ந்து ஆதரித்து வருகின்றனர்.
கடந்த மாதத்தில் நடந்த பெர்சத்து கட்சியின் பொதுப் பேரவையில், கட்சி சார்பில் நாட்டின் 11ஆவது பிரதமர் வேட்பாளராக முஹிடினின் பெயரை அறிவித்திருந்தது. எனினும், பெரிக்காத்தான் நேஷனலைச் சேர்ந்த எவரையும் பாஸ் கட்சி பிரதமர் வேட்பாளராக பெயர் குறிப்பிடவில்லை என்று இம்மாதம் ஒன்றாம் தேதி அக்கட்சியின் தலைமைச் செயலாளர் தக்கியுடின் ஹசான் தெரிவித்திருந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



