முதலில் சுடுவோம், அப்புறம் தான் கேள்வி - ட்ரம்புக்கு டென்மார்க் கடும் எச்சரிக்கை!

top-news
FREE WEBSITE AD

டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்தை கைப்பற்றலாம் என மிரட்டிய சில நாட்களுக்குப் பிறகு, டென்மார்க்கின் பாதுகாப்புத் துறை வெள்ளிக்கிழமை கடுமையான எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. டென்மார்க்கின் எந்தப் பகுதியிலும் வெளிநாட்டு படைகள் ஊடுருவ முயன்றால், தங்கள் வீரர்கள் மேலதிகாரிகளின் உத்தரவை எதிர்பார்க்காமல் உடனடியாக துப்பாக்கிச் சூடு நடத்தி எதிர்த்து போராட வேண்டும் என்று எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக 1952ஆம் ஆண்டு, குளிர்போர் காலத்தில் வெளியிடப்பட்ட ஒரு பழைய உத்தரவு இன்னும் நடைமுறையில் இருப்பதாக டென்மார்க்கின் உள்ளூர் நாளிதழான தெரிவித்துள்ளது. அந்த உத்தரவில், டென்மார்க்கு நிலப்பகுதிக்கு வெளிநாட்டு படைகள் அச்சுறுத்தலாக நுழைந்தால், "முன்னதாகவே சுட்டுத் தாக்க வேண்டும்; மேலதிகாரிகளின் ஆணையை காத்திருக்கத் தேவையில்லை" என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.

டிரம்பின் 'கிரீன்லாந்தை கைப்பற்றும்' மிரட்டலிலிருந்து அவர் பின்வாங்க வேண்டும் என்பதற்காக, டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து தூதர்கள் வாஷிங்டனில் தீவிர முயற்சிகளை தொடங்கியுள்ளனர்.

டென்மார்க்கின் தூதர் ஜெஸ்பர் மோலர் சோரென்சன் மற்றும் கிரீன்லாந்தின் பிரதிநிதி ஜேகப் இஸ்போசெத்சன் ஆகியோர், வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரிகளை சந்தித்து இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளனர். மேலும், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து, டிரம்பை இந்த முடிவில் இருந்து விலக வைக்க உதவி கோரியுள்ளனர். அடுத்த வாரம் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவும் டென்மார்க் அதிகாரிகளை சந்திக்க உள்ளார்.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ட்ரம்ப், "கிரீன்லாந்தை முழுமையாக உரிமையாக வைத்திருக்க வேண்டும்.வெறும் ஒப்பந்தம் அல்லது குத்தகை போதாது" என்று கூறினார்.1951ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம், டென்மார்க்கு மற்றும் கிரீன்லாந்தின் அனுமதியுடன் அங்கு ராணுவ தளங்கள் அமைக்க அமெரிக்காவிற்கு உரிமை உள்ளது. ஆனால் அதில் திருப்தி இல்லை என்றும், முழு உரிமை பெற்றால் மட்டுமே அதனால் கிடைக்கும் பலன்கள் கிடைக்கும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், இந்த விவகாரத்தில் ஐரோப்பிய தலைவர்கள் டிரம்பின் பேச்சை அலட்சியப்படுத்தாமல் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார். "அந்த நிலப்பகுதியின் பாதுகாப்பை ஐரோப்பிய நாடுகள் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் அப்படி செய்யவில்லை என்றால், அமெரிக்கா தானே ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை வரும்," என அவர் எச்சரித்தார்.

ஆர்க்டிக் வட்டத்திற்கு மேல் 80 சதவீதம் உள்ள கிரீன்லாந்தில், சுமார் 56,000 மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் இனுயிட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *