2026 தமிழக தேர்தலில் யாருடன் கூட்டணி? சூசகமாக தெரிவித்த விஜய்! Who will be the alliance partner in 2026? Vijay hints!
- Muthu Kumar
- 26 Jan, 2026
கடந்த ஒரு மாதமாக ஜனநாயகன்பிரச்சினை மற்றும் கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை காரணமாக அமைதியாக இருந்த விஜய், நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளிடையே பேசி உள்ளார். சென்னையில் நடைபெற்ற மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பேசி இருப்பது தற்போது பேசுபொருளாக மாறி உள்ளது.
"யாருக்காகவும் பயந்து அடிபணிய மாட்டோம்", என்றும் "தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடவும் தயார் நிலையில் இருப்பதாகவும்" தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் யாருடன் கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், விஜியின் இந்த கருத்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய விஜய், "தமிழக வெற்றிக் கழகம் எந்த ஒரு அழுத்தத்திற்கும் அடிபணியாது. தேர்தல் களத்தில் கூட்டணி அமைந்தாலும் சரி, அமையாவிட்டாலும் சரி தனித்து நின்று வெல்லும் வல்லமை நம்மிடம் உள்ளது" என்று விஜய் பேசியுள்ளார். மேலும் பேசிய அவர், "நாம் நமது அரசியல் பயணத்தின் மிகவும் முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம். நான் அரசியலுக்கு பணம் சம்பாதிக்க வரவில்லை. நமது ஆட்சியில் ஊழல் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. நேர்மையான அரசியலில் சரியான நிர்வாகத்தை கொடுப்போம். நமது கட்சிக்குள் கோஷ்டி மோதல் இருக்கக்கூடாது, அனைவரும் ஒன்றாக செயல்பட்டால் 2026 தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க முடியும்" என்று விஜய் தெரிவித்து இருந்தார்.
ஆரம்பத்தில் விஜய் அதிமுகவுடன் கூட்டணி வைப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் கூட்டணி கதவுகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகின்றன. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியதை தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என்ற பேச்சு இருந்தது. ஆனால் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளார். மறுபுறம் காங்கிரசும் விஜய்யிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் ஏற்பட்ட விரிசல் காரணமாக, விஜய்யுடன் காங்கிரஸ் கை கோர்க்குமா என்ற கேள்வி இருந்து வருகிறது. இருப்பினும் இந்த கூட்டணி உறுதியாகவில்லை.
தொண்டர்கள் கூட்டத்தில் விஜய் பேசுகையில், "ஏற்கனவே தமிழ்நாட்டை ஆண்டவர்கள் சரணடைந்து விட்டார்கள்" என்று அதிமுகவை நேரடியாக முதல் முறை விமர்சனம் செய்துள்ளார். இதனால் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் இணைய மாட்டார் என்பது உறுதியாகி உள்ளது. சிபிஐ மூலம் பாஜக அழுத்தம் தருவதாகவும், இதனால் விஜய் விரைவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவார் என்று பேசப்பட்டிருந்த நிலையில் விஜய் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது திமுக தலைமையிலான கூட்டணியும், அதிமுக தலைமையிலான கூட்டணியும் உறுதியாகி உள்ள நிலையில், சீமான் தனித்துப் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் தனித்து போட்டியிட தயாராகி வருகிறது. இதனால் இந்த முறை நான்கு முனை போட்டியாக வலுவெடுத்துள்ளது. இதனால் ஓட்டுக்கள் சிதறும் என்ற அபாயமும் எழுந்துள்ளது. மாற்று கட்சியினர் பலர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர். பிப்ரவரி இறுதிக்குள் இந்த கூட்டணி குறித்த முழு விவரங்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் தமிழக வெற்றிக் கழகம் இந்த தேர்தலை தனித்து சந்திக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



