எச்ஆர்டி கோர்ப் புதிய இயக்குநர்கள் குழு நியமனம்! அமைச்சர் ரமணன்!
- THINAGAREN SANGGAREN
- 23 Feb, 2026
பிப்ரவரி 23,
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், இன்று எச்ஆர்டி கோர்ப் (HRDCorp) நிறுவனத்தின் ஐந்து புதிய இயக்குநர்கள் குழு உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கினார். தமது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள அவர், டத்தோ வீரா டாக்டர் ஹாஜி அமீர் அலி மைடின், பேராசிரியர் எமரிட்டஸ் டத்தோ டாக்டர் முகமட் அஸ்மி பின் ஓமார், முகமட் அக்மார் காசிம், பொறியாளர் (Ir.) பரமேஸ்வரன் ஏ. சண்முகநாதன் மற்றும் டத்தோ முஸ்லி ஜாஃபர் ஆகியோர் இந்தப் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். வணிகம், கல்வி மற்றும் தொழில்முறைத் துறைகளில் இவர்களின் பரந்த அனுபவம், எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் தலைமைத்துவம் மற்றும் நிர்வாகக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
"இந்த நடவடிக்கை நிறுவனத்தின் நிர்வாகத்தைச் சீரமைப்பது மட்டுமல்லாமல், நாட்டின் தொழிலாளர்களின் திறன் மற்றும் ஆற்றலை மேம்படுத்தும் முயற்சியையும் துரிதப்படுத்தும். மலேசிய மடாணி கொள்கையின் கீழ், நாட்டின் பொருளாதாரத்தை இன்னும் வலுவானதாகவும், போட்டித்தன்மை வாய்ந்ததாகவும் மாற்றுவதே எங்களின் இலக்கு," என்று அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். புதிய உறுப்பினர்களுக்குத் தனது வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



