ரஃபிசி ரம்லியின் மனைவிக்கு மிரட்டல்- சம்பந்தப்பட்டவரை கண்டுபிடிப்பதில் போலீஸ் தீவிரம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக. 27-

முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ரஃபிசி ரம்லியின் மனைவிக்கு, மிரட்டல் செய்தியை அனுப்பிய நபரைக் கண்டுபிடிக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உதவியைப் பெற போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இவ்விவகாரத்திற்குத் தொடர்புடைய நபரை விரைவில் கண்டுபிடிக்க முடியும் என்று தங்கள் தரப்பு நம்புவதாக. தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார். "இந்த விவகாரத்தில் சக நிறுவனங்களின் உதவியை நாங்கள் நாடுகின்றோம். விரைவில் சிறந்த முடிவைப் பெற முடியும் என்று நான் நம்புகிறேன்," என்றார் அவர்.

நேற்று, கோலாலம்பூர், புக்கிட் கியாராவில் நடைபெற்ற அரச மலேசிய போலீஸ் படையின் மூன்றாவது சிறப்பு உரையாடல் தொடரை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த பின்னர், முஹமட் காலிட் செய்தியாளர்களிடம் அதனை கூறினார்.

சம்பந்தப்பட்ட தொலைபேசி எண் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருப்பதை தமது தரப்பு அடையாளம் கண்டிருப்பதாக முன்னதாக,முஹமட் காலிட் கூறியிருந்தார்.

இதனிடையே, கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி அடையாளம் தெரியாத நபரால், பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரஃபிசி ரம்லியின் மகன் ஊசியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பி.டி.ஆர்.எம் விசாரணை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார். இந்தத் தாக்குதலில் ஒரு தனிநபர் சம்பந்தப்பட்டு இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும் முஹமட் காலிட் கூறினார்.

"இதை நாங்கள் உறுதிப்படுத்த முடியாது. நாங்கள் இன்னும் விசாரித்து வருகிறோம். ஏதேனும் முன்னேற்றங்கள் இருந்தால் அவ்வப்போது தெரிவிக்கப்படும்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *