ஹம்சா எதற்கு? எங்களிடம் வேட்பாளர் இருக்கிறார்! - பாஸ் திட்டவட்டம்
- Shan Siva
- 05 Apr, 2026
கோலாலம்பூர், ஏப் 5: கடந்த பிப்ரவரியில் பெர்சாத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்ட போதிலும், லாரூட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹம்சா ஜைனுதீன் எதிர்க்கட்சித் தலைவராகத் தொடர்வதற்குத் தங்களது 43 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிப்பதாகக் கூறப்படுவதை பாஸ் கட்சி மறுத்துள்ளது.
பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான், ஹம்சாவின் பொறுப்பை ஏற்க கட்சி ஏற்கனவே முடிவு செய்துவிட்டதாகவும், அவருக்குப் பதிலாக வருபவர் "விரைவில்" அறிவிக்கப்படுவார் என்றும் கூறினார்.
ஜூன் மாதம் நடைபெறவுள்ள அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்திற்கு முன்பாக புதிய எதிர்க்கட்சித் தலைவர் அறிவிக்கப்படுவார் என்று அவர் கூறியதாக உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.
எங்களிடம் வேட்பாளர் இருக்கிறார், என்று அவர் கூறினார்.
முன்னதாக, பெர்சாத்து கட்சியின் தானா மேரா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் இக்மால் ஹிஷாம் அப்துல் அஜீஸ், 69 எதிர்க்கட்சி எம்.பி.க்களில் பெரும்பான்மையானோர், நாடாளுமன்றத்தில் ஹம்சா தொடர்ந்து அணியை வழிநடத்த வேண்டும் என்று விரும்புவதாகக் கூறியிருந்தார்.
இதில் பாஸ் கட்சியின் அனைத்து எம்.பி.க்களும், பெர்சாத்து கட்சியின் 19 எம்.பி.க்களில் 13 பேரும் அடங்குவதாக இக்மால் கூறினார்.
பெர்சாத்து தலைவர் முஹைதீன் யாசினின் விசுவாசிகள், ஹம்சா கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு அப்பதவியில் நீடிப்பதற்கான நம்பகத்தன்மையை இழந்துவிட்டார் என்று வலியுறுத்தி, புதிய எதிர்க்கட்சித் தலைவரை விரைவாக அறிவிக்குமாறு பாஸ் கட்சியை (PAS) கேட்டுக்கொண்டிருந்தனர்.
தற்போது பாஸ் உதவி தலைவர் அஹ்மத் சம்சுரி மொக்தார் தலைமையில் உள்ள பெரிகாத்தான் நேஷனல், மார்ச் மாத இறுதியில் புதிய எதிர்க்கட்சித் தலைவரை அறிவிக்க இருந்த நிலையில், இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்த வாரத் தொடக்கத்தில், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், இந்த விவகாரம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும், மக்களவை ஜூன் மாதத்தில்தான் மீண்டும் கூடவிருப்பதால் அவசரம் ஏதுமில்லை என்றும் கூறியிருந்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



