ரஜினி நடிக்கும் 173 ஆவது படத்தை இயக்கும் சிபி சக்கரவர்த்தி!

top-news
FREE WEBSITE AD

75 வயதை கடந்தபோதும், இன்னும் தமிழ் சினிமாவின்  சூப்பர் ஸ்டாராக ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருபவர் நடிகர் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்தின் 173-வது படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை பிரபல காமெடி இயக்குநர் சுந்தர்.சி இயக்கவுள்ளதாகவும் முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த கூட்டணி தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஆனால், அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே சுந்தர்.சி இந்த படத்தில் இருந்து விலகினார். இதனால், தலைவர் 173 குறித்து பல்வேறு குழப்பங்களும், வதந்திகளும் பரவத் தொடங்கின.

இதன் பிறகு, ரஜினிகாந்த்தை சந்தித்து கதை சொல்ல பல இளம் இயக்குனர்கள் வரிசை கட்டியதாக தகவல்கள் வெளியாகின. அதில் குறிப்பிடத்தக்கவர்கள்: சூர்யா நடிப்பில் 'கருப்பு' படத்தை இயக்கிய நடிகர் - இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி, பார்க்கிங் படத்திற்காக தேசிய விருது பெற்ற ராம்குமார் பாலகிருஷ்ணன் மேலும் சில புதுமுக இயக்குநர்கள் முயற்சி செய்தனர்.

இவர்களில் யார் தேர்வாகப்போகிறார்? ரஜினிகாந்த் எந்த மாதிரியான கதையை தேர்வு செய்வார்? என்ற கேள்விகள் ரசிகர்களிடையே தீவிரமாக பேசப்பட்டு வந்தன.

இந்த நிலையில், தலைவர் 173 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று காலை  வெளியாகும் என நேற்று மாலை படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இன்று வெளியாகிய அறிவிப்பு ரசிகர்களை செமையாக உற்சாகப்படுத்தியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி பெரும் கமர்ஷியல் வெற்றியை பெற்ற 'டான்' படத்தின் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி, ரஜினிகாந்தின் 173-வது படத்தை இயக்கவுள்ளார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். ரஜினி - அனிருத் கூட்டணி என்றாலே ரசிகர்களுக்கு தனி கொண்டாட்டம் என்பதால், இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

தலைவர் 173' திரைப்படம் 2027-ஆம் ஆண்டு பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் ரிலீஸ் என்றாலே, ரஜினி ரசிகர்களுக்கு அது திருவிழா தான். போஸ்டரில் இடம்பெற்றுள்ள ஸ்டைல், டைட்டில் டிசைன், வெளியீட்டு அறிவிப்பு ஆகியவை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

'டான்' படத்தின் மூலம் யூத், கமர்ஷியல், எமோஷன் ஆகியவற்றை கலந்த கதை சொல்லலில் தனது திறனை நிரூபித்த சிபி சக்ரவர்த்தி, ரஜினிகாந்துக்காக எந்த மாதிரியான கதைக்களத்தை தேர்வு செய்திருப்பார்? மாஸ் அரசியல் கதையா? சாதாரண மனிதனின் எழுச்சியா? அல்லது முற்றிலும் புதிய ஜானரா? என்ற ஆர்வம் தற்போது ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

ஒருபுறம் 'ஜெயிலர் 2', மற்றொரு புறம் 'தலைவர் 173', அதையும் தாண்டி தொடர்ந்து புதிய இயக்குனர்களுடன் பணியாற்றும் துணிச்சல் - ரஜினிகாந்த் இன்னும் ஏன் சூப்பர் ஸ்டார் என்பதற்கான காரணம் இதுதான் என்று ரசிகர்கள் பெருமையாக கூறி வருகின்றனர். மொத்தத்தில், தலைவர் 173 அறிவிப்பு ரஜினி ரசிகர்களுக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸாக மாறியுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *