நீதிபதிகள் நியமன விவகாரத்தில் நீதித் துறை ஆணையம் நியாயமாக செயல்படவில்லையா?

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 13-

நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்யும் விவகாரத்தில் நீதித்துறை நியமன ஆணையமான எஸ்பிகே நியாயமான முறையில் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த ஆணையத்தில் இடம் பெற்றிருக்கக் கூடிய உறுப்பினர்கள், ஒரே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்களையும் ஒரே வயது வரம்பில் உள்ளவர்களையும் நியமனம் செய்வதில் அதிக முனைப்பு காட்டுவதாக மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி டத்தோ டாக்டர் ஹமிட் சுல்தான் அபு பக்கர் கருத்துரைத்துள்ளார்.

இதன் மூலம் கூட்டரசு நீதிமன்றத்தில் நண்பர்கள், முன்னாள் மாணவர்கள் என ஒரு பெரிய குழுவே உருவாகியுள்ளதாக அவர் கூறினார். ஆனால், இந்த ஆணையம் அமைக்கப்படுவதற்கு முன்பாக இதுபோன்று நிகழ்ந்ததில்லை. தனது சொந்த கருத்தின்படி நீதிபதிகள் நியமன விவகாரத்தில் அந்த ஆணையம் விவேகமாக செயல்பட தவறி விட்டது என்றார் அவர். இதன் காரணமாகவே நாட்டின் தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் உட்பட பலர் ஒரே நேரத்தில் ஓய்வு பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது என உத்துசான் மலேசியாவிற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

மேலும், நாட்டின் தலைமை நீதிபதி நியமன விவகாரத்திற்கு அந்த ஆணையம் பொறுப்பேற்று நியாயமான முறையில் செயல்பட வேண்டும்.எஸ்பிகே அதன் கடமைகளை முறையாகவும் நேர்மையாகவும் மேற்கொள்ள தவறியதற்கு பிரதமரையோ ஆட்சியாளர்களையோ குறை சொல்வது நியாயமா என அவர் கேள்வி எழுப்பினார்.
நாட்டின் தலைமை நீதிபதி நியமனம் குறித்த பேச்சுகள், கருத்து வேறுபாடுகள் அனைத்தும் இனி நாடாளுமன்றத்தில் நடத்தப்பட வேண்டும். அதன் தொடர்பில் ஆட்சேபங்கள் இருந்தால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் கருத்துகளை முன்வைக்கலாம்.

அதை விடுத்து நாடாளுமன்றத்திற்கு வெளியில் கூச்சலிடுவது நெறியற்ற செயலாகும்.இது போன்ற முறையற்ற செயல்கள் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கும் ஆட்சியாளர்கள் மீதான மரியாதைக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமையும் என்றும் டத்தோ டாக்டர் ஹமிட் சுல்தான் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *