புலியின் உடல் கள்ளச் சந்தையில் வெ.3 லட்சத்துக்கு விலை போகலாம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப். 19-

ஜொகூரில் இரண்டு நாட்களுக்கு முன்பு காரொன்றில் இருந்து கைப்பற்றப்பட்ட "மலாயன்" இனத்தைச் சேர்ந்த புலியின் உடல் கள்ளச் சந்தையில் இரண்டரை லட்சம் வெள்ளிக்கும் மூன்று லட்சம் வெள்ளிக்கும் இடையில் விலைபோகும் அளவுக்கு மதிப்புடையது என்று வனவிலங்கியல் மற்றும் தேசியப் பூங்காத்துறையின் தலைமை இயக்குநர் அப்துல் காடிர் நேற்று தெரிவித்தார்.

வனவிலங்குகளைக் கடத்தும் கும்பலால் அப்புலி கொல்லப்பட்டிருக்கலாம் என
நம்பப்படுகிறது. அச்சம்பவம் தொடர்பில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதைத் தொடர்ந்து அக்கும்பலை அடையாளம் காணும் முயற்சியில் போலீசாருடன் இணைந்து வனவிலங்கியல்துறை அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர் என்று அவர் சொன்னார்.

கள்ளச் சந்தையில் புலியின் ஒவ்வோர் உடல் பாகத்திற்கும் தனித்தனியாக விலை நிர்ணயிக்கப்படுகிறது என்றார்.மலாயன் புலிகளும் இதர அரிய விலங்குகளும் வேட்டையாடப்படுவதைத் தடுப்பதில் நாங்கள் முழுக்கவனம் செலுத்தி வருகிறோம் என்றார் அவர்.

பேராக், பகாங், ஜொகூர், கிளந்தான், திரெங்கானு, கெடா, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் ஆகிய எட்டு மாநிலங்களின் வனக்காப்புப் பகுதிகளில்தான் மலாயன் புலிகள் காணப்படுகின்றன. அப்புலிகளின் வாழ்விடமாக விளங்கிவரும் காடுகளின் பரப்பளவு குறைந்து வருவதே இதற்கு காரணமாகும் என்று காடிர் விளக்கினார்.
ஜொகூரின் மெர்சிங் அருகே பெல்டா தெங்காரோ எனும் இடத்தில் கார் ஒன்றுக்குள் புலியொன்றின் உடல் வைக்கப்பட்டிருப்பதைப் போலீசார் கண்டுபிடித்தனர்.அதன் தொடர்பில் செவ்வாய்க்கிழமையன்று மூவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் 28 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் ஆவர். அப்புலியின் தலை மீது ஆறு துப்பாக்கித் தோட்டா காயங்கள் காணப்பட்டன. பொறியில் சிக்கிக் கொண்டிருக்கலாம் என்பதற்கு அடையாளமாக அதன் உடலின் இதர பகுதிகளிலும் காயங்கள் காணப்பட்டன.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *