பறவை மோதியதால்தான் போர் விமானம் விழுந்தது-விமானப் படைத் தலைவர் தகவல்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப். 19-

குவாந்தான் விமானப் படைத் தளத்தில் கடந்த மாதம் போர்விமானமொன்று விழுந்து நொறுங்கியதற்குப் பறவையொன்று அதனை மோதியதே காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விமானம் புறப்படும் தறுவாயில் பறவை மோதியதால், அதன் இடதுபுற இயந்திரம் செயலிழந்தது என்று தெரிவிக்கப்பட்டது.

விசாரணை வாரியமொன்று நடத்திய பூர்வாங்க ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாரியம் தனது விசாரணையை ஆகஸ்டு 22ஆம் தேதியன்று தொடங்கியது என்று அரச மலேசிய விமானப்படையின் தலைவர் நோராஸ்லான் அரிஸ் குறிப்பிட்டார். ஊதா நிற நாரையொன்றினால் அவ்விபத்து நிகழ்ந்தது என்பது ஆதாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று குவாந்தான் விமானப் படைத்தளத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

தற்காப்புத்துறைக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகம், ரசாயனத்துறை, போலீஸ், வனவிலங்கியல் மற்றும் தேசியப் பூங்காத்துறை, அமெரிக்க கடற்படை ஆகியவற்றின் உதவியோடு அந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது என்று நோராஸ்லான் தெரிவித்தார். விமானத்தின் இயந்திரத்திற்குள் பறவையின் எலும்புச் சிதறல்கள் காணப்பட்டன. அது ஊதா நிற நாரையின் எலும்புகள் என்பது பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது என்றார் அவர்.

பறவைகள் விமானங்களை மோதும் சம்பவங்கள் இதற்கு முன்னரும் நடந்துள்ளன. ஆனால், மலேசிய போர்விமானத்தை மோதிய நாரை உருவத்தில் பெரியதாகும் என்றார்.
விபத்தில் சிக்கிய விமானம் அமெரிக்காவில் தயாரிக்கப்படும் எஃப்ஏ-18டி ஹோர்னட் ரக போர்விமானமாகும்.

பகாங், குவாந்தானின் சுல்தான் ஹாஜி அமாட் ஷா விமானப் படைத் தளத்தில் ஆகஸ்ட் 21ஆம் தேதியன்று இரவு 9.05மணிக்கு அச்சம்பவம் நிகழ்ந்தது. விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த விமானத்தில் தீப்பற்றியது. அது விழுந்து நொறுங்குவதற்குள் அதன் விமானி அஸார் அலாங் கமாருடின், இணை விமானி இஸூடின் சாலே ஆகியோர் அதிலிருந்து கீழே குதித்து உயிர் தப்பினர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *