செகு சந்திரா கைது! போலிஸ் அதிரடி

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் 12: சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் இந்திய சமூகத்தை அவமதிக்கும் மற்றும் தூண்டுதல் உள்ளடக்கத்தைக் பதிவிட்டதாக கூறப்படும் செகு சந்திரா என அழைக்கப்படும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பிப். 10ஆம் தேதி ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான் பகுதியில் உள்ள சோகோ வணிக வளாகத்தில் இருந்தபோது, ஒரு இந்தியர் அந்தப் பதிவைக் கண்டதாக கூறி போலீசில் புகார் அளித்தார். அந்தப் பதிவில் இந்திய சமூகத்தை நாகரிகமற்றவர்கள் என விவரித்ததுடன், கட்டுப்பாடின்றி செயல்படும் வழிபாட்டு மையங்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டதாகவும், அது பொதுச் சமாதானத்தை பாதிக்கும் நோக்கில் வெளியிடப்பட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை 3 மணியளவில் சந்தேகநபரை போலீஸ் குழு கைது செய்தது. கைது செய்யப்பட்டதையடுத்து, வைரலான பேஸ்புக் இணைப்பை பதிவேற்ற பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கைப்பேசியும் பறிமுதல் செய்யப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் கூறினார்.

விசாரணையில், சமூக ஊடகங்களில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தவும், பின்தொடர்பவர்களின் கவனத்தை ஈர்க்கவும் தான் அந்தப் பதிவை வெளியிட்டதாக சந்தேகநபர் ஒப்புக்கொண்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு 1948ஆம் ஆண்டின் சிடிஷன் சட்டம் பிரிவு 4(1), குற்றச் சட்டம் பிரிவு 505(c), மற்றும் 1998ஆம் ஆண்டின் தொடர்பாடல் மற்றும் பல்லூடகச் சட்டம் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

சந்தேகநபர் மேலதிக நடவடிக்கைக்காக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இனம், மதம், அரசாட்சி (3R) தொடர்பான நுணுக்கமான விவகாரங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், இவ்வாறான உணர்வுகளை பிரபலத்திற்காக அல்லது ஆதரவைப் பெற பயன்படுத்த முயல்பவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஃபாடில் எச்சரித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *