சுக்மா 2026 போட்டியில் சிலம்பத்திற்கு வாய்ப்பு!

top-news
FREE WEBSITE AD

(டிகே.மூர்த்தி)

ஈப்போ, ஆக.15-

சிலாங்கூரில் எதிர்வரும் 2026இல் நடைபெறவுள்ள சுக்மா போட்டி விளையாட்டில் சிலம்பத்திற்கு வாய்ப்பு வழங்கியதற்கு, பேரா மாநில அரசின் சார்பில் சிவநேசன் தமது பாராட்டினைத் தெரிவித்தார்.சிலம்பம் என்பது தமிழர்களின் வீர விளையாட்டாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2024 இல் சரவாக்கில் நடந்த சுக்மா போட்டியில் சிலம்பத்திற்கு வாய்ப்பு கொடுத்திருந்தது.

நடைபெற்ற சிலம்பாட்டத்தில், பல மாநிலங்களில் இருந்து திறம் பெற்ற சிலம்பக் குழுக்கள் பங்கேற்றன. அவற்றில், பேரா குழுவும் கலந்து கொண்ட நிலையில், இறுதியாக பேராவே, 6 தங்கம் 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கள் பெற்று முதல் நிலை வெற்றிக் குழுவாக வாகை சூடியது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, சுக்மாவில் சிலம்பம் இடம் பெறுமா? அல்லது நிராகரிக்கப்படுமா? என்றும், இது குறித்த சர்ச்சையை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப் போவதாகவும் சில தரப்பினர் பேசிவந்தனர். நடக்காத அல்லது நடத்த ஆளுமையற்ற இவர்கள் காலத்தில் சுக்மா போட்டி நடந்துள்ளது. அந்த வகையில், ஒற்றுமை அரசாங்கம்தான் சுக்மாவில் சிலம்பம் என்றால் என்ன என்பதை நாட்டிற்கே அறிமுகம் செய்துள்ளது.

மேலும், இனி வரும் காலங்களில், சுக்மாவில் குறிப்பாக சிலம்பம் இடம் பெற வேண்டும் என்று கெஞ்சிக்கொண்டிருக்காமல், இயல்பாகவே மற்ற போட்டிகளைப் போன்று, சிலம்பத்தையும் சுக்மா அட்டவணையில், அதிகாரப்பூர்வமாக பதிவு செய்வதில் பேரா அரசு தீர்க்கமாக உள்ளது என்றார்.

இதற்கு இளைஞர் பண்பாட்டு விளையாட்டு அமைச்சகம் உறுதுணையாக இருக்கும். மேலும், வரும் சுக்மா சிலம்பப் போட்டியில், பேரா மாநில சிலம்பக் குழு மீண்டும் தனது முதல் நிலைக்கான வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ளும் என்பதில் மாநில அரசாங்கம் நம்பிக்கையுடன் உள்ளது. அதற்கான நிதி மற்றும் தேவையான உதவிகள் வழங்குவதற்கும், மாநில அரசு தயாராக இருக்கிறது என சுங்காய் ஜசெக சட்டமன்ற உறுப்பினருமான அவர் குறிப்பிட்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *