மொழி-இலக்கியங்களுக்கு முன்னுரிமை அளிப்பீர்-உயர்கல்வி அமைச்சர்!
- Muthu Kumar
- 18 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை18-
மொழி-இலக்கியங்களுக்கு முன்னுரிமை அளிப்பீர்.இதன் வழி, முழு திறமை வாய்ந்த தலைமுறையினரை உருவாக்க முடியும் என்று உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சம்ரி அப்துல் காடிர் தெரிவித்தார்.நாட்டின், இவ்வாண்டு உயர்க்கல்வி திட்டத்தில் தொழில்நுட்பம், மனிதநேயத்தில் சமநிலையைக் கொண்ட ஒரு தலைமுறையை உருவாக்க விரும்புவதாகவும் டாக்டர் சம்ரி கூறினார்.
'எங்கள் 10 ஆண்டு திட்டத்திற்கு, தொழில்நுட்பம், மனிதநேயம் இரண்டிலும் சமநிலை கொண்ட ஒரு தலைமுறையை உருவாக்க வேண்டும் என்பது எங்களது அணுகுமுறைகளில் ஒன்றாகும். மொழி, இலக்கியம் ஆகியவற்றிற்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படும். இது சீரான, விரிவான தலைமுறையை உருவாக்க உதவும்," என்றார் அவர்.
நேற்று மலாயா பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வியல் துறையில் ரஹ்மத் முஸ்தஃபா அறக்கட்டளை சார்பில் கவிக்கோ அப்துல் ரஹ்மான் நினைவு ஆய்வு இருக்கை அமைத்து நிதி வழங்கும் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.அதோடு, இதுபோன்ற நிகழ்ச்சிகள் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஊக்குவிப்பாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, ரஹ்மத் முஸ்தஃபா அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்ட ஐந்து லட்சம் ரிங்கிட் நிதி மலாயா பல்கலைக்கழக மாணவர்களுக்கு குறிப்பாக இந்திய ஆய்வியல் துறை மாணவர்களுக்கு ஊக்குவிப்பாக இருக்கும் என்று இஸ்லாமியக் கல்வி வாரியத்தின் தலைவர் டத்தோஸ்ரீ முஹ்மட் இக்பால் தெரிவித்தார்.
"இந்திய ஆய்வில் பிரிவில் உள்ள மாணவர்களுக்கு ஊக்குவிப்பு கொடுத்து தமிழ்மொழியிலும் தமிழ் இலக்கியத்திலும் ஒரு பயன்பாட்டை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கம் அவர்களுக்கு இருந்தது. எதற்காக, இந்த அறக்கட்டளை நிறுவப்பட்டதோ, அதற்கான நடவடிக்கைகள் தொடரும்," என்றார் அவர்.
இந்நிதி, ஆய்வு செய்யக்கூடிய மாணவர்கள், படைப்பாளிகளின் பொருளாதார சிக்கலை தீர்ப்பதற்கு உதவியாக இருக்கும் என்று ரஹ்மத் முஸ்தஃபா அறக்கட்டளையின் தலைவர் முஹ்மட் முஸ்தஃபா நம்பிக்கை தெரிவித்தார்.
ஆய்வு செய்யக்கூடிய மாணவர்களுக்கு நிச்சயமாக பயனளிக்கும்.பொருளாதாரத்தில் பின்தங்கி இருபவர்களுக்கு உதவலாம். முன்னதாக, தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் அறக்கட்டளை ஒன்றை நிறுவி மலேசியா, சிங்கப்பூர் படைப்பாளிகளுக்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
இப்போதுதான் இங்கு செய்கிறோம்.," என்கிறார் முஸ்தஃபா.இந்நிகழ்ச்சியில் மலாயா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் டத்தோஸ்ரீ டாக்டர் நோர் அசுவான் அபு ஒஸ்மான், முக்கிய பிரமுகர்கள் உட்பட இந்திய ஆய்வியல் துறையின் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



