உலகம் அழியும் வரை மலேசியாவில் நிலநடுக்கம் ஏற்படாதா? உத்தரவாதம் ஏதுமில்லை!
- Muthu Kumar
- 30 Aug, 2025
புத்ராஜெயா, ஆக.30-
உலகம் அழியும் காலம் வரையில் மலேசியாவில் நிலநடுக்கம் வரவே வராது என்பதற்கு உத்தரவாதம் ஏதுமில்லை. ஆதலால், பூகம்பம் உட்பட இயற்கை பேரழிவுகளின் அபாயத்தை மலேசியா எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது என்று, வீடமைப்பு மற்றும் ஊராட்சி மன்றத்துறை அமைச்சர் ஙா கோர் மிங் வலியுறுத்தியுள்ளார்.
ஜொகூரின் சிகாமட்டை கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நேற்று வெள்ளிக்கிழமை வரையில் நான்கு முறை மிதமான நிலநடுக்கங்கள் உலுக்கி இருப்பதைத் தொடர்ந்து அவர் இந்த வலியுறுத்தலை முன்வைத்துள்ளார்.
அவ்வப்போது நிலநடுக்கங்களும் சுனாமியும் ஏற்பட்டு வரும் ஒரு நாடாக மலேசியா இல்லையென்றாலும், அப்படி நடக்கும் என்று ஒன்று இருந்தால் அது நிச்சயம் நடந்தே தீரும் என்று, ஙா எச்சரிக்கை விடுத்திருக்கின்றார்."உலகம் அழியும் காலம் வரையில் நிலநடுக்கத்தினால் மலேசியா பாதிக்கப்படாது என்று நாம் கருதிவிட முடியாது. உண்மை இதுதான், அதாவது பூமிப் பந்து சுழன்று கொண்டிருக்கிறது" என்று ஙா கூறியுள்ளார்.
புத்ராஜெயாவில் உள்ள வீடமைப்பு மற்றும் ஊராட்சிமன்றத்துறை அமைச்சில் நேற்று வெள்ளிக்கிழமை நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தின்போது ஙா இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் நிகழக்கூடிய சாத்தியமான இயற்கைப்
பேரிடர்களுக்கு எதிராக மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதோடு, அதை எதிர்கொள்ளத் தயார் நிலையிலும் இருக்க வேண்டும் என்று, நாட்டு மக்களை அவர் வலியுறுத்தினார்.இந்நிலையில், மலேசிய கட்டுமானத் தொழில்துறை மேம்பாட்டு வாரியத்தினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வழிகாட்டிகளை, மலேசியாவில் புதிதாக மேற்கொள்ளப்படும் அனைத்து மேம்பாட்டுத் திட்டங்களும் அவசியம்
பின்பற்ற வேண்டியது. கடந்த 2016ஆம் ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவைக் கருவியில் 7 மற்றும் அதற்கு கூடுதலான அளவுக்கு பதிவாகும் நில அதிர்வுகளைத் தாங்கக் கூடிய ஆற்றலும் அந்த வழிகாட்டிகளில் அடங்கும் என்று ஙா தெரிவித்தார்.கடந்த 2016ஆம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள பல கட்டடங்கள் இந்த வழிகாட்டிகளைப் பின்பற்றி இருக்கவில்லை என்றும் வலுவான நிலநடுக்கம் ஏற்படுமேயானால், அவை சரிந்து விழக்கூடிய ஆபத்து இருப்பதையும் அவர் ஒப்புக் கொண்டார்.
“இதனால்தான், நமக்கு நகர்ப்புற புதுப்பித்தல் சட்டம் தேவை. பொதுமக்களின் பாதுகாப்புதான் எங்களின் முன்னுரிமை. இந்த விசயத்தில் சமரசம் காணப்படாது. " ஒரு பேரிடரை எதிர்கொள்வதற்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக் கொள்வதில் ஜப்பானிய மக்கள் பின்பற்றி வரும் முன்னெச்சரிக்கை போக்கை மலேசியர்கள் அனைவரும் ஒரு முன்னுதாரணமாக அவசியம் பின்பற்ற வேண்டும்.
“இதற்கு ஒட்டுமொத்த அணுகுமுறை தேவைப்படுகிறது. இது ஓர் அரசியல் விவகாரமல்ல, மாறாக கூட்டு ஒத்துழைப்பாகும். நிலநடுக்கம் ஏற்படும் பட்சத்தில் அதை எதிர்கொள்ள நாம் முன்கூட்டியே தயார் நிலையில் இல்லாமல் இருந்தால், யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது" என்று ஙா குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



