சுற்றுலா விசாவை தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டவர்கள் மீது குடிநுழைவு துறை கடும் நடவடிக்கை
- Surendran Sumdraraj
- 12 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 12-
சுற்றுலா நோக்கில் நாட்டிற்குள் நுழைந்து பின்னர் உணவகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் வேலை செய்வதற்காக சமூக வருகை அனுமதி (PLS) விசாவை தவறாக பயன்படுத்தும் வெளிநாட்டவர்களைத் தொடர்ந்து கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என குடிநுழைவு துறை இயக்குநர் டத்தோ ஜகரியா ஷாபான் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி 1 முதல் மார்ச் 9 வரை நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 2,618 நடவடிக்கைகளின் மூலம் மொத்தம் 9,497 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அவரது விளக்கப்படி, கைது செய்யப்பட்டவர்களில் 1,158 பேர் 1963 ஆம் ஆண்டு குடிநுழைவு விதிகள் 39(b) பிரிவின் கீழ், விசா நிபந்தனைகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“பல வெளிநாட்டவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட விசா வசதிகளைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக தற்காலிக வேலை அனுமதி (PLKS) மற்றும் சமூக வருகை அனுமதி (PLS) விசாக்களை பயன்படுத்தி, அந்த அனுமதியில் குறிப்பிடப்பட்ட விதிகளுக்கு மாறாக வேலை செய்கின்றனர்,” என்று அவர் கூறினார்.
இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கும் பொருட்டு, குடிநுழைவுத் துறை தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



