சுற்றித் திரியும் விலங்குகளுக்கு உணவளிப்போருக்கு அபராதம்? ஊராட்சி மன்றம் மீது வழக்குத் தொடுங்கள்!
- Muthu Kumar
- 15 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 15-
நாய்கள் உட்பட ஆதரவின்றி வீதிகளில் சுற்றித் திரியும் விலங்குகளுக்கு உணவளித்ததற்காக ஊராட்சி மன்றங்களினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளவர்கள் அத்தகைய சட்டவிதியை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்குமாறு நேற்று வலியுறுத்தப்பட்டனர்.
சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றங்களை நீதிமன்றத்திற்கு இழுப்போருக்கு உதவ தாம் தயாராக இருப்பதாக, விலங்குகள் உரிமைகள் இயக்கவாதியும் வழக்கறிஞருமான ராஜேஸ் நாகராஜன் தெரிவித்துள்ளார். வீதிகளில் சுற்றித் திரியும் விலங்குகளுக்கு உணவளிப்பதற்கு எதிரான எந்த ஒரு சட்டமும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக இருக்கும் என்பதுடன் அது ஓர் அதிகார துஷ்பிரயோகமும் ஆகும் என்று அவர் கூறியுள்ளார்.
அடுக்குமாடி வீட்டுப் பகுதிகள் உட்பட, எந்த ஒரு குடியிருப்புப் பகுதியிலும் வீதிகளில் சுற்றித் திரியும் விலங்குகளுக்கு உணவளிப்பதற்கு இது பொருந்தும் என்று ராஜேஸ் கூறினார்.
“நாம் விரும்புவது எதுவாக இருந்தாலும் அவற்றுக்கு நாம் உணவளிக்கலாம். வீதிகளில் சுற்றித் திரியும் விலங்குகளுக்கு உணவளித்தற்காக யாராவது அபராதம் விதிக்க விரும்பினால், அந்த அபராத ரசீதை என்னிடம் கொண்டு வாருங்கள்.
அந்த அதிகாரத் தரப்பினரை நான் நீதிமன்றம் கொண்டு செல்கிறேன்" என்று ஹெல்ப் பல்கலைக் கழகத்தில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடந்த விலங்குகளின் உரிமைகள் கருத்தரங்கில் உரையாற்றும் போது ராஜேஸ் தெரிவித்தார்.
'கோப்பி' என்ற நாய் சட்டவிரோதமாக கொல்லப்பட்டதாக கூறப்பட்டது தொடர்பில், திரெங்கானு மாநில அரசாங்கம் மற்றும் பெசுட் மாவட்ட மன்றத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள ஒரு வழக்கு குறித்தும் ராஜேஸ் பேசினார்.
இவ்வழக்கு மீதான முடிவைத் தெரிவிக்கும் நாள் வருகின்ற செப்டம்பருக்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறிய அவர், இவ்வழக்கில் தோல்வியுற்றால் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அவ்வழக்கைத் தொடுத்திருப்பவர்கள் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
இதனிடையே, விலங்குகள் நலச் சட்டத்தில் சீர்திருத்தம் செய்யக் கோருவதற்காக, இம்மாதம் 25ஆம் தேதி பிரதமர் அலுவலக வளாகத்தில் ஒரு மறியல் நடத்தப்பட விருப்பதாக, உலக மனித உரிமைகள் சம்மேளனத்தின் தலைவர் எஸ். சசிகுமார் அறிவித்துள்ளார்.வீதிகளில் சுற்றித் திரியும் விலங்குகள் மனிதாபிமானமற்ற முறையில் கொல்லப்படுவதை அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



