பேறுகுறைந்தவர் சிறையில் மரணம்-மரண விசாரணை நடத்துமாறு குடும்பத்தினர் கோரிக்கை!
- Muthu Kumar
- 15 Oct, 2025
கோலாலம்பூர், அக். 15-
சுங்கை பூலோ சிறைச்சாலையில் கடந்த மாதத்தில் மரணமடைந்ததாகக் கூறப்படும் பேறுகுறைந்த ஆடவர் ஒருவர் எவ்வாறு மரணமடைந்தார் என்பதை கண்டறிய, மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று. அவரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமது தம்பி ரிச்சர்ட் மனநலப் பாதிப்புக்கு ஆளானவர் என்றும் சிலாங்கூரின் சபா பெர்ணாமில் உள்ள ஒரு கடையின் கண்ணாடியை உடைத்ததாகக் கூறி கடந்த மாதத்தில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் ரிச்சர்டின் சகோதரி ரெமேக்கா ரோபர்ட் கூறினார்.எனினும், தமது சகோதரரின் மரணம் குறித்து தங்களிடம் தெரிவிக்கப்படும் வரையில் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தது தங்களுக்குத் தெரியாது என்றும் அவர் கூறினார்.
'எனது உறவுக்காரர் ஒருவர் கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி தொலைபேசியில் என்னை அழைத்து, எனது தம்பி சுங்கை பூலோ சிறைச்சாலையில் மரணமடைந்து விட்டதாகத் தெரிவித்தார்.அதைக் கேட்டு, நான் அதிச்சிக்குள்ளானேன் என்று, நேற்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் ரெமேக்கா தெரிவித்தார்.குடும்பத்திடம் தெரிவிக்கப்படுவதற்கு ஒரு நாளுக்கு முன்னரே தமது தம்பி மரணமடைந்து விட்டதை தாம் அறிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
சுங்கை பூலோ மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், தமது சகோதரரின் உடலில் மழுங்கிய ஆயுதத்தால் ஏற்பட்ட பலத்த காயத்தின் அறிகுறிகள் காணப்பட்டதாக ஒரு மருத்துவர் தம்மிடம் தெரிவித்ததாக, ரெமேக்கா கூறினார். அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 23ஆம் தேதி தாம் போலீசில் புகார் செய்ததாகவும் அதன் பின்னர் போலீசாரிடமிருந்து எந்த ஒரு தகவலையும் தாம் பெறவில்லை என்றும் அவர் கூறினார்.
"நேற்று வரையில், யாரும் எங்களுடன் தொடர்பு கொள்ளவில்லை. தமது தம்பி இறந்து அடுத்த வாரத்தோடு ஒரு மாதம் நிறைவடைய விருக்கிறது" என்று அவர் தெரிவித்தார். இதனிடையே, மரண விசாரணை கோரிக்கையை நிராகரித்துவிட வேண்டாம் என்று அட்டர்னி ஜெனரலை. காவலில் நிகழும் மரணங்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களை முற்றாக துடைத் தொழித்தல் (இடிட்) இயக்கத்தின் தலைவர் எம். விஸ்வநாதன் வலியுறுத்தினார்.
சிறைச்சாலைகளில் மரணமடைவோர் எப்படி மரணமடைந்தனர் என்பதை, சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் தெரிந்து கொள்வது நியாயமானது மற்றும் முறையானது என்றும் அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



