மலேசியாவின் பல பகுதிகளில் காற்று மாசுபாடு குறியீடு அளவு அதிகரிப்பு!
- Shan Siva
- 21 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 21: தீபகற்ப மலேசியாவின் பல பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற அளவை எட்டியுள்ளது.
இந்தோனேசியாவின் சுமத்ராவில் அதிகரித்து வரும் காடுகள் மற்றும் நிலத் தீ காரணமாக மலேசியாவின் சில பகுதிகளுக்கு புகை மூட்டம் பரவியது.
மலாக்காவில் உள்ள அலோர் கஜா மிகவும் பாதிக்கப்பட்டது. காலை 9 மணிக்கு சராசரி காற்று மாசுபாடு குறியீட்டு அளவீடு 160 ஆக இருந்தது.
அதேபோல் பகாங் தெமர்லோவில் காற்று மாசுபாடு குறியீட்டின் அளவு 156 ஆகவும், சிலாங்கூர், பந்திங்கில் 155 ஆகவும், நெகிரி செம்பிலான் நீலாயில் 155 ஆகவும், திரெங்கானு கெமாமானில் 153 ஆகவும், சிலாங்கூர், ஜொஹான் செத்தியாவில் 152 ஆகவும், கோலாலம்பூர், செராஸில் 151 ஆகவும் மற்றும் புத்ராஜெயாவில் 124 ஆகவும் பதிவாகியுள்ளன.
மேலும், நாட்டின் 57 பகுதிகளில் மிதமான காற்றின் தரம் பதிவாகியுள்ளது.
50க்குக் கீழே உள்ள குறியீட்டு எண் நல்ல காற்றின் தரத்தையும், 51-100 மிதமான அளவையும், 101-200 ஆரோக்கியமற்ற அளவையும் குறிக்கும். 201-300 மிகவும் ஆரோக்கியமற்ற அள்ளவு என்பதோடு 300க்கு மேல் இருந்தால் அது ஆபத்தானதைக் குறிக்கிறது.
மலேசியாவின் சில பகுதிகளில் புகைமூட்டம் பரவுவதற்கு காரணமான அதிகரித்து வரும் காடுகள் மற்றும் நிலத் தீயை எதிர்த்துப் போராட, இந்தோனேசியா இன்று ரியாவ் மாகாணத்தில் மேக விதைப்பு நடவடிக்கைகளைத் தொடங்க உள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



