புதினின் அழைப்பை ஏற்று மாமன்னர் ரஷ்யா பயணம்!
- Muthu Kumar
- 03 Aug, 2025
கோலாலம்பூர், ஆக. 3-
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் அழைப்பை ஏற்று ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
1967ஆம் ஆண்டு தொடங்கி ரஷ்யாவுடன் அரச தந்திர உறவுகள் நிறுவப்பட்டதிலிருந்து, அந்நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளும் முதல் மலேசிய தலைவராக மாமன்னர் வரலாறு படைப்பார் என்று இஸ்தானா நெகாரா நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மலேசிய அரச நிறுவனத்தின் முக்கிய பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் இந்தப் பயணம் அமைவதாக இஸ்தானா நெகாரா குறிப்பிட்டுள்ளது.இப்பயணம் தற்போதுள்ள இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதோடு, வர்த்தகம், உயர்கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம், மக்களிடையிலான உறவுகள் உட்பட பல்வேறு துறைகளுடனான புதிய ஒத்துழைப்பிற்கு வழிவகுக்கும்.
1996ஆம் ஆண்டு தொடங்கி ஆசியான் உரையாடல் பங்காளியாக ரஷ்யா உள்ள நிலையில், வியூக ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் மலேசியாவும் முக்கிய பங்கை வகிப்பதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிரெம்லினில் நடைபெறும் அரச வரவேற்பு விழாவில் சுல்தான் இப்ராஹிமை விளாடிமிர் புதின் வரவேற்பார் என்றும் அதன் பிறகு அவ்விரு தலைவர்களுக்கும் இடையே அதிகாரப்பூர்வ சந்திப்பு நடைபெறும் என்று இஸ்தான் நெகாரா அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



