ஓபிஎஸ் குற்றமற்றவர் - சசிகலா!
- Muthu Kumar
- 25 Feb, 2026
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதான கட்சிகள் அனைத்தும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் டி.டி.வி. தினகரன் இணைந்துள்ள நிலையில் அந்தக் கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் வி.கே.சசிகலா ஆகியோரைச் சேர்க்க எடப்பாடி பழனிசாமி மறுத்து வருகிறார்.
இந்நிலையில் பசும்பொன்னில் நடைபெறும் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக சசிகலா கூறியிருந்தார்.இதனைத் தொடர்ந்து நேற்று மாலை கமுதி பசும்பொன் அருகில் உள்ள கோட்டைமேட்டில் சசிகலா ஆதரவாளர்கள் சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
இவ்விழாவில் பங்கேற்று பேசிய சசிகலா, ''புரட்சித் தலைவி அக்கா மறைந்தபோது இப்போது இருப்பவர்கள் எல்லோரும் சேர்ந்து என்னை முதல்வர் பதவி ஏற்கச் சொன்னார்கள். ஆனால் அக்காவுக்குச் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்ய வேண்டியிருப்பதால் ஓ.பன்னீர்செல்வமே முதல்வர் பதவியில் தொடரட்டும் எனக் கூறிவிட்டேன். அப்போது பதவியில் இருந்த அமைச்சர்களையும் பதவியில் தொடரச் சொன்னேன்.
ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தைச் சுற்றியிருந்தவர்கள் அவரது போக்கு சரியில்லை எனப் புகார் சொன்னார்கள். காலை, மாலை, இரவு எனத் திரும்பத் திரும்ப என்னிடம் வந்து ஓ.பி.எஸ் குறித்து புகார் சொன்னார்கள்.இதனால் நான் முதல்வராகச் சம்மதித்தேன். ஆனால் அவர் நல்லவர். ஓ.பன்னீர்செல்வத்தைச் சுற்றியிருந்தவர்கள்தான் அவரைத் தவறாக வழி நடத்தினர். இதனால் அவர் திடீரென்று அம்மா சமாதியில் போய் உட்கார்ந்து விட்டார். அதுவே இப்ப அவருக்குச் சிக்கலா போய்விட்டது.
எனக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சூழலில் அம்மா அமைத்த அரசு கலைக்கப்பட்டுவிடக் கூடாது எனக் கருதி எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க அனைவரது சம்மதத்தையும் வாங்கினேன். அவரைப் பற்றி அப்போது எனக்குச் சரியாகத் தெரியவில்லை.
நான் சிறையில் இருந்தபோது அவர் எனக்குப் பல இடையூறுகளைச் செய்தார். என் கணவர் இறந்தபோது கூட அவருக்கான காரியங்களைச் செய்யக்கூட இடையூறு செய்தார். 9 ஆண்டுக் காலமாக இந்த உண்மைகளை எல்லாம் மனதில் போட்டு மறைத்து வைத்திருந்தேன். ஆனால் கட்சியும், கட்சித் தொண்டர்களின் நிலையும் சரிந்து கீழே போய் கொண்டிருக்கும் நிலையில், உண்மைகளை எவ்வளவு காலம் மறைக்க முடியும்.
அவருக்குப் பின்னால வந்த எதிர்க்கட்சி அரசும் நல்ல ஆட்சியைக் கொடுக்கல. இந்தச் சூழலில்தான் சட்டமோ அரசோ கொடுக்குற தீர்ப்பை விட மக்கள் கொடுக்கும் தீர்ப்பே முக்கியமானது எனக் கருதி புதிய களம் காண போகிறேன்.அதற்காக புதிய கட்சியை ஆரம்பிக்கிறேன். ஏழை, எளிய சாமானியர்களின் கட்சியாகவும் திராவிடக் கட்சியாகவும் இது இருக்கும். அதன் கொடியை இங்கு அறிமுகம் செய்கிறேன்.கட்சியின் பெயரினை விரைவில் அறிவிக்கிறேன்'' எனக் கூறி அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுடன் கூடிய புதிய கொடியை அறிமுகம் செய்தார்.
ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆனந்தன், முன்னாள் தலைமை கொறடா நரசிம்மன், முன்னாள் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளைத்துரை மற்றும் பசும்பொன் ஊராட்சி முன்னாள் தலைவர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



