விஜய் முதலமைச்சரானது ஆச்சரியமாக இருந்தது – நடிகை ரோஜா
- Surendran Sumdraraj
- 16 Jul, 2026
சென்னை, ஜூலை 16-
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கிய நடிகை ரோஜா, பின்னர் அரசியலில் ஈடுபட்டு ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் பணியாற்றினார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இயக்குநர் பாரி இளவழகன் இயக்கியுள்ள ‘அன்பே டயானா’ திரைப்படத்தில் ரோஜா முழுநீள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஜூலை 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், அதன் விளம்பர நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில் அண்மையில் அளித்த பேட்டியில் தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து ரோஜா கருத்துத் தெரிவித்தார். விஜய் முதலமைச்சரானது தனக்கு உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்ததாக அவர் கூறினார்.
விஜய்யுடன் ஒரு பாடல் காட்சியில் மட்டுமே நடித்திருப்பதாகத் தெரிவித்த ரோஜா, படப்பிடிப்புத் தளத்தில் அவர் அதிகம் பேசாமல் அமைதியாக ஒரு மூலையில் அமர்ந்திருப்பார் என்றும், காட்சிகள் படமாக்கப்படும்போது மட்டும் அனைவருடனும் கலகலப்பாகப் பழகுவார் என்றும் நினைவுகூர்ந்தார்.
அவ்வளவு அமைதியான ஒருவர் அரசியலில் எவ்வாறு சாதிப்பார் என்ற கேள்வி தனக்குள் எழுந்ததாகவும் அவர் தெரிவித்தார். ஒரு அரசியல் கட்சியை நடத்துவதற்கு மக்களுடன் தொடர்ந்து தொடர்புகொண்டு பேசும் திறன் மிகவும் அவசியம் என்றும், அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலளிக்கத் தேவையில்லை என்றாலும், மக்களிடம் தெரிவிக்க வேண்டிய கருத்துகளைத் தெளிவாக எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் நடிகை ரோஜா கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



