தலைமைத்துவம் சீராக தொடராததுதான் மித்ராவின் தோல்விக்குக் காரணம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக.7-

மித்ரா எனப்படும் மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவுக்குச் சீரான தலைமைத்துவம் இல்லாத காரணத்தினால்தான் அது தொடர்ந்து தோல்வி கண்டு வந்துள்ளது என்று அதன் தலைவர் பி.பிரபாகரன் நேற்று மக்களவையில் தெரிவித்தார். மித்ராவின் தலைமைத்துவம் அடிக்கடி மாறியதால், இந்திய சமூகத்தைக் கைதூக்கி விடுவதற்கான நீண்ட கால முயற்சிகளுக்கு இடையூறு ஏற்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மித்ரா மற்றும் அதற்கு முன்பு செயல்பட்டு வந்த செடிக் ஆகிய அமைப்புகளின் தலைமைத்துவம் அடிக்கடி மாறிக் கொண்டிருந்தது. ஒவ்வோர் ஆண்டும் தலைமை இயக்குநர்கள் மாற்றப்பட்டனர், தலைமைத்துவங்களும் மாறின.

அத்தகைய மாற்றங்கள் நடைபெறும்போது
மித்ராவின் கொள்கைகளும் மாறின. ஓர் ஆண்டில் ஒரு குறிப்பிட்ட திட்டம் இருக்கும். அடுத்தாண்டில் புதிய தலைவர் வரும்போது அத்திட்டம் காணாமல் போய்விடும். அதனால்தான், உண்மையான உருமாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்று பக்காத்தான் ஹராப்பானின்" பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபாகரன் கூறினார்.

தலைமைத்துவம் சீராக தொடராத காரணத்தினால்தான் இந்திய சமூகத்தில் பெரிய தாக்கத்தை மித்ராவினால் ஏற்படுத்த முடியவில்லை என்று அவர் சுட்டிக் காட்டினார். தற்போதைய தமது பதவிக்காலத்தில் மித்ராவின் செயல்பாடுகள் தேசியக் கொள்கைகளுக்கு இயந்த வகையில் இருப்பதை உறுதி செய்து வருகிறேன், தனிநபர்களின் விருப்புவெறுப்புகளுக்கு ஏற்றபடி அது செயல்படவில்லை. நாளையே மித்ராவில் நான் இல்லாமல்போனால் கூட அதன் செயல்பாடுகள் அரசாங்கக் கொள்கைளுக்கு ஏற்றபடி இருக்கும்.

இனிமேல் யார் தலைவராக வந்தாலும் மனம்போனபடி செயல்பட முடியாது என்றார் பிரபாகரன். பல்வேறு துறைகளில் சேர்ந்து பங்களிக்க மித்ரா தயாராக உள்ளது. ஆனால், இதனைச் சாதிக்க கணிசமான நிதியுதவி தேவைப்படுகிறது. இதற்கு எல்லா வகையிலும் மித்ரா உதவ முடியும். இந்திய சமூகத்தின் பிரச்சினைகளைக் களைவதற்கு ஏதுவாக மித்ராவுக்கு 500 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்யுங்கள் என்றார் அவர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *