ஸ்டார்" கட்சியைச் சேர்ந்த ஐந்து முக்கியத் தலைவர்கள் பதவி விலகல்!
- Muthu Kumar
- 11 Oct, 2025
கோத்தா கினாபாலு, அக். 11-
சபாவின் ஆளும் ஜிஆர்எஸ் கூட்டணிக்குத் தங்களின் ஆதரவைத் தெரிவித்த “ஸ்டார்" கட்சியைச் சேர்ந்த ஐந்து முக்கியத் தலைவர்கள் பதவி விலகியிருப்பதை அக்கட்சியின் தலைவர் ஜெப்ரி கிட்டிங்கான் நேற்று உறுதிப்படுத்தினார். அந்த தலைவர்களின் பதவி விலகலால் அக்கட்சியில் அவர்கள் வகித்து வந்த பதவிகள் இயல்பாகவே முடிவுக்கு வந்து விட்டன என்று கிட்டிங்கான் குறிப்பிட்டார்.
“ஸ்டார்” கட்சியின் துணைத் தலைவர் எல்ரோன் அல்பிரட் ஆங்கின். மூன்று உதவித் தலைவர்களான அபிடின் மாடிங்கிர், அனுவார் ஆயோப், ஃபுளோவியா இங் ஆகியோர் தத்தம் பதவிகளிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்திருந்தனர். ஆனாலும், ஜிஆர்எஸ் கூட்டணிக்கான தங்களின் ஆதரவு தொடரும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளனர். மற்றோர் உதவித் தலைவரான ராபர்ட் தாவிக் என்பவரும் அக்கட்சியிலிருந்து விலகியிருப்பதாக பின்னர் அறிவித்தார்.
வரும் சபா சட்டமன்றத் தேர்தலில் சபா முற்போக்கு கட்சியைத் தவிர்த்து, ஸ்டாரும் இதர மூன்று உள்ளூர் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆளும் ஜிஆர்எஸ் கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுடன் தொடர்ந்து ஒத்துழைக்கப் போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து அக்கூட்டணியிலிருந்து ஸ்டார் விலகிக் கொண்டது. தீபகற்ப கட்சியான பக்காத்தான் சபாவில் ஆதிக்கம் செய்வதை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



