தீபாவளித் திருநாள் கொண்டாட்டம்: நெகிரி மாநிலத்திற்குள் 8 லட்சம் வாகனங்கள் பிரவேசிக்கும்!
- Muthu Kumar
- 14 Oct, 2025
சிரம்பான், அக். 14-
இவ்வாண்டின் தீபாவளிக் கொண்டாட்டத்தை முன்னிட்டு எட்டு லட்சம் வாகனங்கள் நெகிரி செம்பிலானுக்குள் நுழையும் என போலீசார் எதிர்பார்க்கின்றனர். அம்மாநிலத்திற்கு வழக்கமாக நுழையும் சுமார் நான்கு லட்சத்து அறுபதாயிரம் வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 73விழுக்காடு அதிகமாகும்.
தீபாவளித் திருநாள் விடுமுறையுடன் பள்ளி விடுமுறையும் சேர்ந்து கொள்வதால் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கும். அம்மாநிலத்தின் பிரதான சாலைகளில் அதிகமான வாகனங்கள் பயணிக்கும் என்று நெகிரி மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ அல்ஸாப்னி அமாட் குறிப்பிட்டார்.
வாகனங்களின் சீரான போக்குவரத்தையும் சாலைப் பயனர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு இம்மாதம் 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை ஒப்ஸ் லஞ்சார் எனும் பெயரில் போக்குவரத்துக் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாநிலப் போக்குவரத்துப் புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையைச் சேர்ந்த 279 அதிகாரிகள் அந்நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்று அல்ஸாப்னி குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



