நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல்லில் வெளிப்பட்ட ஜெகன்மோகினி குகை
- Surendran Sumdraraj
- 17 Jul, 2026
தர்மபுரி, ஜூலை 17:
தர்மபுரி மாவட்டத்தின் பிரபல சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றின் நீர்வரத்து வெகுவாகக் குறைந்துள்ளதால், நீரில் மூழ்கியிருந்த ஜெகன்மோகினி குகை தற்போது வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.
ஒகேனக்கல்லுக்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகம், கேரளம் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். அவர்கள் காவிரி ஆற்றில் குளித்தும், பரிசல் பயணம் மேற்கொண்டும் இயற்கை அழகை ரசித்து வருகின்றனர்.
ஜெகன்மோகினி குகை, கடந்த 1978ஆம் ஆண்டு வெளியான ‘ஜெகன்மோகினி’ திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக பாறையில் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும்போது இந்தக் குகை முழுமையாகத் தண்ணீரில் மூழ்கிவிடும். நீர்வரத்து குறையும் காலங்களில் மட்டுமே குகை வெளியே காட்சியளிக்கும்.
குகைக்குள் சுற்றுலாப் பயணிகள் சுமார் 10 மீட்டர் தூரம் வரை சென்று அதன் பாறை அமைப்பையும் இயற்கை அழகையும் பார்வையிட முடிகிறது. தற்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 300 கனஅடியாக இருப்பதால், பரிசல் ஓட்டிகள் சுற்றுலாப் பயணிகளை ஜெகன்மோகினி குகை வரை அழைத்துச் சென்று காட்டுகின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



