பினாங்கு தைப்பூசத்தை முன்னிட்டு மார்கட்–சூலியா ஸ்ட்ரீட் தற்காலிகமாக மூடல் - பக்தர்கள் வாகன நிறுத்தத்தை தவிர்க்க வேண்டுகோள்
- Tamil Malar (Reporter)
- 01 Feb, 2026
பினாங்கு, பிப். 1-
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, இன்று (30/1/2026) கோயில் வீடு அமைந்துள்ள பகுதியில் உள்ள மார்கட் ஸ்ட்ரீட், சூலியா ஸ்ட்ரீட் ஆகிய வீதிகளில் இடைப்பட்ட சாலை தற்காலிகமாக மூடப்படும் என பினாங்கு நாட்டுக்கோட்டை செட்டியார் ஆலய அறங்காவலரும், தைப்பூசத் திருவிழா 2026 தலைவருமாகிய திரு வீரப்பன் தெரிவித்தார்.
நேற்று மேற்கொண்ட அலைஒளி செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது, தைப்பூசத்தை முன்னிட்டு 12,000 முதல் 14,000 வரையிலான பக்தர்கள் கோயில் வீட்டிற்கு வந்து முருகனைத் தரிசிக்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனால் ஏற்படக்கூடிய சாலை நெரிசலைத் தவிர்க்கும் நோக்கில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று 30/1/2026 வெள்ளிகிழமை தொடங்கி இந்தப் பாதைகள் தற்காலிகமாக மூடப்படுவதாக கூறினார்.
மேலும், 30 மற்றும் 31 ஜனவரி ஆகிய இரு நாட்களிலும், மார்கட் ஸ்ட்ரீட்டிலிருந்து சூலியா ஸ்ட்ரீட் வரை இடைப்பட்ட பகுதிகளில் எந்தவித வாகனங்களையும் நிறுத்த வேண்டாம் என பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அவர் வலியுறுத்தினார்.
வாகனங்கள் நிறுத்தப்பட்டால், ரதம் செல்லுவதில் பெரும் சிரமம் ஏற்படும் என அவர் மேலும் கூறினார்.
அதேபோல், தைப்பூசத் திருவிழா நிறைவடைந்த பின்னர், 2/2/2026 நள்ளிரவு பினாங்கு செட்டியார் ஆலயத்திலிருந்து புறப்பட்டு, 3/2/2026 அதிகாலை ரதம் மீண்டும் வந்தடையும் காலகட்டத்திலும், ரதம் செல்லும் பாதைகளில் வாகனங்களை நிறுத்தாமல் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக 31/1, 1/2 மற்றும் 2/2 ஆகிய திகதிகளில், ஜாலான் கோட்லிப், ஜாலான் துங்கு அப்துல் ரஹ்மான், ஜாலான் டி. எஸ். ராமநாதன் உள்ளிட்ட முக்கிய சாலைகளின் இருபுறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், ரத ஊர்வலம் தடைபட்டு, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என திரு வீரப்பன் தெரிவித்தார்.
தைப்பூசத்தை அமைதியாகவும், இனிமையாகவும், சிறப்பாகவும் கொண்டாட அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இத்தகைய சிக்கல்களை தவிர்ப்பதே சிறந்த தைப்பூசக் கொண்டாட்டமாக அமையும்” என அவர் தமது வேண்டுகோளை நிறைவு செய்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



