அனைத்து மாநிலங்களிலும் “இஸ்லாம் அல்லாத” விவகார மேலாண்மை குழு அமைப்பு – அமைச்சர்
- Tamil Malar (Reporter)
- 06 Feb, 2026
கோலாலம்பூர், பிப். 6-
இஸ்லாம் அல்லாத மதங்களின் வழிபாட்டுத் தலங்களுக்கான நில விவகாரங்கள் மற்றும் இஸ்லாம் அல்லாத மத நிர்வாகத்தை ஒருங்கிணைப்பதற்காக, அனைத்து மாநிலங்களும் “இஸ்லாம் அல்லாத மத விவகார மேலாண்மை குழு” (Jawatankuasa Pengurusan Hal Ehwal Bukan Islam) அமைத்துள்ளதாக தேசிய ஒற்றுமை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆரோன் ஆகோ டாகாங் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், மத விவகாரங்கள் மற்றும் நிலம் தொடர்பான அனைத்துப் பணிகளும், கூட்டரசு அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணை (Jadual Kesembilan) கீழ் உள்ள மாநில பட்டியல் (Senarai Negeri) படி மாநில அரசின் அதிகார வரம்புக்குள் வருவதாக விளக்கினார்.
“மாநில அரசுகளுக்கு மத நிர்வாகம், நில நிர்வாகம், உரிமை, பதிவு மற்றும் நிலம் கையகப்படுத்துதல் போன்ற அம்சங்களில் அதிகாரம் உள்ளது. இது அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்ட மாநில பட்டியலுடன் ஒத்துப்போகிறது,” என அவர் தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, வழிபாட்டுத் தலங்களுக்கான நில ஒதுக்கீடு, சட்ட நடைமுறைகள், பதிவு செயல்முறை மற்றும் இஸ்லாம் அல்லாத மத நிர்வாகம் போன்ற விடயங்களை ஒரே தளத்தில் ஒருங்கிணைத்து தீர்வு காணும் நோக்கில், மாநில அரசுகள் இந்த சிறப்பு குழுக்களை அமைத்துள்ளதாக கூறினார்.
இந்த தகவலை அவர் தனது பேஸ்புக் பதிவின் மூலம் பகிர்ந்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



