காரில் மறைத்து வைத்திருந்த 11 கிலோ போதைப்பொருள் பறிமுதல் – ஒருவர் கைது
- Tamil Malar (Reporter)
- 06 Jan, 2026
கோலாலம்பூர், ஜன. 6-
கோலாலம்பூர் கூட்டரசு பிரதேச, அரச மலேசிய சுங்கத்துறை பிரிவு, தாமான் டேசா பெட்டாலிங்கில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதியின் பொது வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த பெரோடுவா பெஸ்ஸா ரக காரை சோதனையிட்டு, 11.031 கிலோ எடையுள்ள சியாபு (மெத்தாம்பெட்டமைன்) போதைப்பொருளை பறிமுதல் செய்தது. இதன் சந்தை மதிப்பு சுமார் 3.53 லட்சம் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சுங்கத்துறை இயக்குநர் வான் நோரிசான் வான் தாவுத், அதிகாலை 3 மணியளவில் பொதுமக்களின் ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில், காரின் பின்னிருக்கையில் இரண்டு ஷாப்பிங் பைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கிரிஸ்டல் வடிவிலான போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது எனத் தெரிவித்தார்.
இந்தப் போதைப்பொருள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, உள்ளூர் சந்தையில் சிறு சிறு பொட்டலங்களாக படிப்படியாக விநியோகிக்க திட்டமிடப்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது. காரின் உரிமையாளரான 30 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அத்துடன் காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை தடுப்பதற்கு பொதுமக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சுங்கத்துறை வலியுறுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



