சமுதாய நலனை முன்னிருத்தியே பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டோம் - புரட்சி உமாகாந்தன்
- Surendran Sumdraraj
- 25 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 25-
அண்மையில் நடைபெற்ற 'Program Harmoni Madani' -இல் கலந்து கொண்டது குறித்து சிலர் குறைகூறுவதை மறுத்து, சமுதாயத்தின் நலனை முன்னிறுத்தி மட்டுமே அந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டதாக உரிமை இயக்கத்தின் தலைவர் உமாகாந்தன் தெரிவித்தார். மக்களைக் களத்தில் நேரில் சென்று சந்தித்து களமாடுபவன் நான். வெறுமனே பேருக்காகவும் மாலைக்காகவும் அல்லது என்னுடைய சுயநலத்துக்காக சமூகப் பிரச்சினையைக் கையாள்பவன் நான் அல்ல என அவர் மேலும் சொன்னார்.
காவல் துறை அதிகாரி ஏற்பாடு செய்திருந்த அந்தக் கலந்தாய்வில் அழைப்பின் பேரில் கலந்து கொண்டதாகக் கூறிய உமாகாந்தன், கூட்டத்திற்கே வராது வெறுமனே ஏதோ எதிரி தரப்பிடம் கைகுலுக்கி விட்டோம் என தம்பட்டம் அடிப்பது வேடிக்கையாக இருப்பதாகச் சொன்னார். நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மதிப்பவன் என்ற முறையில் அரசு அதிகாரியால் அழைக்கப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டதில் தவறு இருப்பதாகத் தமக்கு தெரியவில்லை என அவர் மேலும் கூறினார்.
சமூக வலைதளங்களில் வாய் சவடால் அடிக்கும் பலர் அக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. எதிரிக்கு புறமுதுகு காட்டும் பழக்கம் இல்லை. போரை நேரடியாக, நேர்மையாகச் சந்திக்கக் கூட்டத்தில் கலந்து கொண்டதாகக் கூறிய உமாகாந்தன் பிரச்சினைக்கு முழுமையான தீர்வை நோக்கியே அக்கூட்டத்தில் கலந்து கொண்டதாகக் கூறினார்.
இந்தக் கோயில் விவகாரம் தொடர்பில் நிலவும் பதற்ற நிலையை அனைவரும் அறிவோம். அதன் சீற்றம் காட்டை எரிக்கும் தீ போல அனல் பறப்பதையும் அனைவரும் அறிய வேண்டியுள்ளது. நாங்கள் நெருப்பை அனைத்து மக்களைக் காக்கக் களமாடுகிறோம். ஒரு சிலரைப் போன்று எரியும் நெருப்பில் குளிர் காயவில்லை என புரட்சி இயக்கத்தின் தலைவர் உமாகாந்தன் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



