இங்கிலாந்துக்கு எதிரான வெற்றி மிகவும் சிறப்பானது – மெஸ்ஸி நெகிழ்ச்சி
- Surendran Sumdraraj
- 16 Jul, 2026
அட்லாண்டா, ஜூலை 16-
உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் அரையிறுதியில் இங்கிலாந்தை 2–1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய அர்ஜென்டினா, தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால வரலாற்றுப் பின்னணியைக் கருத்தில் கொண்டால், இந்த வெற்றி மிகவும் சிறப்பானது என்று அர்ஜென்டினா நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
அட்லாண்டாவில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியின் 55-ஆவது நிமிடத்தில் அந்தோனி கார்டன் கோல் அடித்து இங்கிலாந்துக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இதையடுத்து, தாக்குதலைத் தீவிரப்படுத்திய அர்ஜென்டினா இறுதி நிமிடங்களில் அபாரமாக மீண்டது.
ஆட்டத்தின் 85-ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி வழங்கிய பந்தைப் பயன்படுத்தி என்சோ பெர்னாண்டஸ் சமநிலை கோலைப் பதிவு செய்தார். தொடர்ந்து கூடுதல் நேரத்தில் மெஸ்ஸி துல்லியமாக அனுப்பிய பந்தை மாற்று வீரராகக் களமிறங்கிய லவுடாரோ மார்டினஸ் தலையால் முட்டி வெற்றி கோலாக மாற்றினார். இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினாவின் இரண்டு கோல்களுக்கும் மெஸ்ஸியே உதவினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



