சமூக ஊடக தளங்களுக்கான பயனர் எண்ணிக்கை வரம்பை மறுபரிசீலிக்க அரசு திட்டம்

top-news

கோலாலம்பூர், ஜன. 15-
மலேசியாவில் செயல்படும் சமூக ஊடக,  இணையச் செய்தி பரிமாற்ற தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பயனர் எண்ணிக்கை வரம்பை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் உள்ளதா என்பதை தகவல் தொடர்பு அமைச்சகம் தற்போது ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆய்வு, குறிப்பாக எந்த தளங்கள் “பயன்பாட்டு சேவை வழங்குநர் வகுப்பு உரிமம்” (ASP(C)) பெற்றதாகக் கருதப்பட வேண்டும் என்பதைக் தெளிவுபடுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த ஜனவரி 1 முதல், மலேசியாவில் 80 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட பயனர்களைக் கொண்ட அனைத்து சமூக ஊடக,  இணையச் செய்தி சேவை வழங்குநர்களும், 1998 ஆம் ஆண்டின் தொடர்பு, பல்லூடக  சட்டத்தின் பிரிவு 46A-ன் கீழ் “டீமிங்” விதிமுறையின் அடிப்படையில் ASP(C) உரிமம் பெற்றதாகக் கருதப்படுகின்றன. இந்த நடைமுறை, ஆன்லைன் தளங்களின் பொறுப்புணர்வையும், பயனர் பாதுகாப்பையும் உறுதி செய்யும் நோக்கில் அமல்படுத்தப்பட்டது.

தகவல் தொடர்பு அமைச்சர் தாதுக் பஹ்மி பாட்சில், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான “குரோக்” (Grok) எனப்படும் கருவி மூலம் பெண்கள், குழந்தைகள் தொடர்பான ஆபத்தான, சட்டவிரோதமான, அநாகரிக உள்ளடக்கங்கள் உருவாக்கப்பட்ட சம்பவங்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விளக்கினார். இத்தகைய சம்பவங்கள் சமூக பாதுகாப்புக்கும் நெறிமுறைகளுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பயனர் எண்ணிக்கை வரம்பில் சில சீரமைப்புகள் செய்யப்படலாம் என்றும், இது தொடர்பான முழுமையான ஆய்வை மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் (MCMC) மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *