ஹிஷாமுடின், கைரி மீண்டும் அம்னோவில் இணைந்தால் BNக்கு நன்மையே – வீ கா சியோங்
- Surendran Sumdraraj
- 15 Mar, 2026
ஜொகூர் பாரு, மார்ச் 15-
டத்தோ ஸ்ரீ ஹிஷாமுட்டின் ஹுசைன் மற்றும் கைரி ஜமாலுட்டின் மீண்டும் UMNO கட்சியில் இணையத் தயாராக இருப்பது பாரிசான் நேஷனல் (BN) கூட்டணிக்கும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என MCA தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், இந்த முன்னேற்றம் பல இனங்களைச் சேர்ந்த மக்களிடையே BN மீதான நம்பிக்கையை மீண்டும் உருவாக்க உதவும் என்றும் எதிர்வரும் தேர்தல்களில் அது ஆதரவாக அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
“கடந்த காலத்தில் பல சவால்களையும் கடினமான சூழ்நிலைகளையும் கடந்து BN தற்போது மீண்டும் வலுப்பெறும் நிலையில் உள்ளது. எனவே இந்த முன்னேற்றம் ஒரு நேர்மறையான மாற்றமாக நான் பார்க்கிறேன். அது கட்சியை பலவீனப்படுத்தாது,” என்று அவர் கூறினார்.
அதே நேரத்தில், மக்களின் ஆதரவு முழுமையாக திரும்பிவிட்டதாகக் கூற இன்னும் காலம் தேவை என்றும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், கட்சிக்குள் ஒற்றுமையை வலுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டால் ஆதரவுகள் மீண்டும் சிதறாது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஜொகூர் ஜெயா பல்நோக்கு மண்டபத்தில் நேற்று இரவு நடைபெற்ற MCA தெற்கு ஜொகூர் சீன புத்தாண்டு திறந்த இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனை தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



