மலாக்கா துப்பாக்கிச்சூடு: அறிக்கை அரசு வழக்கறிஞர் அலுவலகத்திற்குச் சமர்ப்பிப்பு
- Tamil Malar (Reporter)
- 16 Dec, 2025
கோலாலம்பூர், டிச. 16-
மலாக்காவில் கடந்த மாதம் போலீஸாரால் துப்பாக்கிச்சூடு செய்யப்பட்டு உயிரிழந்த மூன்று இளைஞர்கள் தொடர்பான வழக்கின் விசாரணை அறிக்கை இன்று அரசு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு (AGC) சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
டேவான் நெகாராவில் நடைபெற்ற கேள்வி-பதில் அமர்வில் பேசிய அன்வார், இச்செய்தி நாட்டின் தலைமை போலீஸ் அதிகாரி டத்தோ ஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயிலிடம் இருந்து உறுதியளிக்கப்பட்டதாகக் கூறினார். "விசாரணை முழுமையானதாகவும், வெளிப்படையானதாகவும் நடத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. எந்தவித சமரசமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறினார்.
கடந்த நவம்பர் 24ஆம் தேதி, டுரியான் துங்கால் பகுதியில் உள்ள ஒரு செம்பனை தோட்டத்தில் நடந்த சம்பவத்தில், 24 முதல் 29 வயதுடைய மூன்று இளைஞர்கள் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், வழக்கறிஞர்கள், ஆடியோ பதிவு, சாட்சியங்கள் அடிப்படையில் இது திட்டமிட்ட கொலை என்று குற்றம்சாட்டியுள்ளனர். வெளிப்படையான விசாரணைக்கு வலியுறுத்தி, சுயாதீன ஆணைக்குழு அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



