கோத்தா திங்கியில் புதிய காசநோய் கிளஸ்டர் – 37 பேருக்குத் தொற்று
- Tamil Malar (Reporter)
- 10 Feb, 2026
கோலாலம்பூர், பிப். 10-
கோத்தா திங்கியில் கண்டறியப்பட்ட புதிய காசநோய் (TB) கிளஸ்டர், இந்த தொற்று நோய் எங்கும், எவருக்கும், எச்சரிக்கையின்றி பரவக்கூடும் என்பதற்கான கடுமையான எச்சரிக்கையாக அமைந்துள்ளது. 72 வயதுடைய ஒரு மூதாட்டியின் மூலமாக தொடங்கிய இந்த கிளஸ்டர், இதுவரை 37 பேருக்குத் தொற்று பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்லி அகமட் கூறுகையில், காசநோய் நகர்ப்புறங்களில் மட்டுமல்லாமல், கிராமப்புறங்களிலும் ஏற்படக்கூடும் என்றும், மைகோபாக்டீரியம் டியூபர்குலோசிஸ் (Mycobacterium tuberculosis) என்ற பாக்டீரியா காற்றின் வழியாக பரவுவதால், ஒருவர் அறியாமலேயே பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.
“இது அனைவரையும் உலுக்கும் ஒரு ‘wake up call’. 25 ஜனவரி அன்று கோத்தா திங்கியில் பதிவான இந்த சம்பவத்தில், 72 வயதுடைய ஒரு மூத்த பெண், அல்குர்ஆன் ஆசிரியையாக இருந்ததே முதல் தொற்று காரணமாகும். அவர் பல்வேறு வயது குழுக்களைச் சேர்ந்த மாணவர்களுடன் நேரடியாக தொடர்பில் இருந்துள்ளார்,” என அவர் கூறினார்.
பிப்ரவரி 7ஆம் தேதி நிலவரப்படி, இந்த கிளஸ்டர் மூலம் 29 குழந்தைகள் மற்றும் எட்டு பெரியவர்கள் என மொத்தம் 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம், காசநோயை அலட்சியப்படுத்தக் கூடாது என்பதையும், ஆரம்ப கட்டத்திலேயே பரிசோதனை மற்றும் சிகிச்சை பெறுவதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



