மத்திய கிழக்கில் மோதலால் மலேசிய பொருளாதாரத்திற்கு உடனடி பாதிப்பு இல்லை – FOMCA
- Surendran Sumdraraj
- 13 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 13-
மதிய கிழக்கில் அதிகரித்து வரும் மோதல்களுக்குப் பின்னரும் மலேசியாவின் உள்நாட்டு பொருளாதார நிலையும் அத்தியாவசியப் பொருட்களின் வழங்கலும் இன்னும் மிகவும் நிலையாக உள்ளது என்று மலேசிய நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பு (FOMCA) தெரிவித்துள்ளது.
இதனால் நாட்டின் மக்கள் மற்றும் நுகர்வோர் அமைதியாக இருக்க வேண்டும் என்றும், தேவையற்ற பதற்றம் காரணமாக பொருட்களை அதிகமாக வாங்கி சேமிக்கும் ‘பானிக் வாங்குதல்’ போன்ற நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு பதிலாகச் செலவுகளைச் சிக்கனமாக நிர்வகித்து வீணாவதைக் குறைப்பது அவசியம் என வலியுறுத்தப்பட்டது.
FOMCA அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் டி. சரவணன் கூறுகையில், மேற்கு ஆசிய மோதல்கள் உலகளாவிய எண்ணெய் விலைகள் மற்றும் விநியோக சங்கிலிகளுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருந்தாலும், அதன் தாக்கம் மலேசிய நுகர்வோருக்கு உடனடியாக தெரியாது; அது படிப்படியாக மட்டுமே வெளிப்படும் என்றார்.
“தற்போதைய நிலையில் அந்த மோதலுடன் தொடர்புடைய முக்கிய விலை உயர்வுகள் எதுவும் நாம் காணவில்லை. உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சு (KPDN) சந்தை நிலைத்தன்மையைப் பேணுவதில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. பொருட்களின் விலைகளைத் தொடர்ந்து கண்காணித்து, அத்தியாவசியப் பொருட்கள் நியாயமான விலையில் கிடைக்க தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது,” என்று அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



