கட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் கசிவு – 6 முக்கிய முறைகள் கண்டறியப்பட்டன
- Surendran Sumdraraj
- 04 Apr, 2026
ரந்தாவ் பஞ்சாங், ஏப். 4-
நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களில் ஏற்படும் கசிவுகளைத் தடுக்கும் முயற்சியில், ஆறு முக்கிய செயல்முறைகள் (modus operandi) அடையாளம் காணப்பட்டுள்ளதாக உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்வாதாரச் செலவுத் துறை தெரிவித்துள்ளது.
அமைச்சர் அர்மிஷான் அலி கூறுகையில், இந்த செயல்முறைகள் கடந்த மார்ச் 11ஆம் தேதி நடைபெற்ற அமலாக்க அமைப்புகளுக்கிடையேயான உயர்மட்ட ஒருங்கிணைப்பு குழு (JTPAP) முதல் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன. அந்தக் கூட்டத்துக்குத் துணைப் பிரதமர் படிலா யூசுப் தலைமை தாங்கினார்.
அவர் மேலும் விளக்குகையில், இந்த சட்டவிரோத செயல்கள் நிலத்திலும் கடலிலும் நடைபெறுகின்றன. குறிப்பாக, கட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள் வழங்க அனுமதி பெற்ற உரிமையாளர்கள் (CSA) தங்கள் உரிமத்தை தவறாக பயன்படுத்தி கிடங்குகள், எரிபொருள் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர்.
இரண்டாவது முறையாக, மூன்றாம் தரப்பினரால் பெறப்பட்ட பொருட்கள் சட்டபூர்வமான விநியோக வழிகளில் செலுத்தப்படாமல் மாற்று வழிகளில் திருப்பப்படுகின்றன. இதனுடன், கடல் வழியாக நடைபெறும் ‘பங்கரிங்’ நடவடிக்கைகளிலும் தவறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இத்தகைய முறைகேடுகளை கட்டுப்படுத்துவதற்கான கூடுதல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அவசியமாக இருப்பதாகவும், இதுகுறித்து போக்குவரத்து அமைச்சகம் விரிவான ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



