ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய தேவஸ்தானம் பத்து பிரண்டாம் மலாக்கா -ஆலய வரலாறு

top-news

தொகுப்பு :- லட்சுமி சுப்பிரமணியம்

மலேசியாவின் தென் பகுதியில் வரலாற்று மாநிலமாக அதிகாரப்பூர்வமாக பிரகடனம் செய்யப்பட்ட மலாக்கா நகரில் இருந்து 6.5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பத்து பிரண்டாம் என்னும் சிறு கிராமத்தில் உள்ள நதிக்கரையோரத்தில் இவ்வாலயம் வெகு சிறப்பாகவும் கம்பீரத் தோற்றத்துடனும் அழகுற ஒய்யாரமாக ஓங்கி நிற்கும் காட்சி பார்ப்போரின் கண்களை கவரவே செய்கிறது. மலாக்காவுக்கும் தம்பினுக்கும் இடையிலுள்ள இரயில் பாதையை அடுத்துள்ள அரசாங்க தரிசு நிலத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு எட்டடி சதுர நிலத்தில் இவ்வாலயம் நம் முன்னோர்களால் தகரக் கொட்டையாக அமைக்கப்பட்டு அதில் திரிசூலம் ஒன்றை பொருத்தி அம்பாள் வழிபாடு செய்து வந்ததாக நம்பப்படுகிறது.

அம்பாள் ஆலயமாக செயல்பட்டு வந்த இவ்வாலயம் நாளடைவில் சுப்பிரமணியர் ஆலயமாக மாற்றியமைக்கப்பட்டது. பிறகு முருகனுக்கு உகந்த திருவிழாவான தைப்பூச திருவிழாவினை இங்கு புலம்பெயர்ந்த நம் முன்னோர்கள் கொண்டாடி வந்தனர். 1965 ஆம் ஆண்டு வாக்கில் சில நல்லுள்ளங்களின் முயற்சியால் அரசாங்கத்திடமிருந்து ஆலயம் அமைப்பதற்கு தற்காலிக அனுமதியின் கீழ் ( T.O.L) 10,000 ரிங்கிட் மானியமும் நிலமும் கிடைக்கப்பெற்றது. மேலும் பொது மக்களிடமிருந்தும் பெறப்பட்ட கணிசமான நன்கொடைகளையும் கொண்டு ஆலயம் புதுப்பிக்கப்பட்டு இராமசாமி ஸ்தபதியின் தலைமையில் 10 /7/ 1966 ஆம் ஆண்டு மாபெரும் முதலாவது மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்தேறியது.

இம் மாபெரும் கும்பாபிஷேகத்திற்கு பிறகு இவ்வாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் திருவிழா இன்றும் முதன்மை விழாவாக வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்ற து .நம்மவர்களுடன் சேர்ந்து இவ்விழாவினை மேலும் பெருமை சேர்க்கும் வகையில் சீன வம்சாவளியைச் சேர்ந்த " *பெரணாக்கான்" ( சீன பாபாக்கள்) கொண்டாடி வருவதாக கூறப்படுகிறது. ஆண்டுக்கு 52 சிறப்பு அபிஷேக ஆராதனைகள் இவ்வாலயத்தில் நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து இரண்டாவது மாபெரும் மகா கும்பாபிஷேகம் 8 /11/1987 ஆம் ஆண்டு மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அம்மன் ஆலயமாக வழிபட்டு வந்த இவ்வாலயம் பிறகு கலியுக வரதனாக மூலஸ்தான தெய்வமாக அருள்மிகு ஸ்ரீசுப்பிரமணியர் தோன்றலானார். தற்பொழுது இவ்வாலயம் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் தேவஸ்தானமாக திகழ்ந்து வருகிறது. மேலும் கற்பக விநாயகர், புவனேஸ்வரி அம்மன் ,நடராஜர் நந்தி வழிபாடு, நவக்கிரக வழிபாடு என ,அனைத்து வழிபாடுகளும் விசேஷ நாட்களிலும் ஒவ்வொரு வெள்ளி செவ்வாய்க்கிழமைகளிலும் வெகு சிறப்பான முறையில் பூஜை புனஸ்காரங்களுடன் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாலயத்தில் தைப்பூச திருவிழா முதன்மை திருவிழாவாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது. நம்மவர்களை தவிர்த்து இங்கு வசிக்கும் சுற்று வட்டார சீன அன்பர்களும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் இவ்வாலய தைப்பூச திருவிழாவில் தவறாது கலந்து கொண்டு தங்களின் நேர்த்திக் கடன்களை செலுத்தி வருகின்றனர்.

 டத்தோ இராகவன் (மலாக்கா மாநில ஆட்சி குழு உறுப்பினர் 2002), சிங்கப்பூர் வணிகரான அமரர் கோவிந்தசாமி பிள்ளை அமரர் வி. பி . கிருஷ்ணன், சுற்று வட்டார பொதுமக்கள், சீன அன்பர்கள் என அனைவரும் இவ்வாலயத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளனர்.

 20 11 ஆம் ஆண்டு என். சுதானந்தன் தலைமையில் ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு 12/ 5 /2013 ஆம் ஆண்டு அமரர் சிவஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் தலைமையில் அதன் மூன்றாவது மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆலய பின்புறத்தில் மனோகரன் என்பவர் தலைமையில் மடப்பள்ளி ஒன்று நிறுவப்பட்டது.  அமரர் கோவிந்தசாமி பிள்ளை கட்டி கொடுத்த பழைய பல்நோக்கு மண்டபமும் புதுப்பிக்கப்பட்டு அவருடைய பெயரையே சூட்டப்பட்டுள்ளது. 

மீண்டும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வாலயத்தின் மாபெரும் மகா கும்பாபிஷேகம் கடந்த ஆண்டு 13/7/2025 ஆம் ஆண்டு சுற்றுவட்டார குடியிருப்பாளர்கள், பொதுமக்கள் ஆதரவோடு, வெளி மாநிலங்களில் இருந்து வந்து கலந்துக் கொண்ட பக்த மெய்யன்பர்கள் புடைசூழ ,  ஸ்ரீ சுப்பிரமணியர் திரௌபதி அம்மன் ஆலய குருக்களும் சிவஸ்ரீ சண்முகம் அவர்களின் தலைமையிலும்  இம்மாபெரும் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.   வரும் தைப்பூச த்திருவிழாவில் 5,000த்திற்கும் மேற்பட்ட பக்த மெய்யன்பர்கள் ஒன்று கூடுவார்கள் என நம்பப்படுகிறது. 

மற்றும் ஒரு திருச்செந்தூர் (தமிழகம்) என்று அழைக்கப்படும் வரலாற்று மாநிலமான மலாக்கா ,பத்து பிரண்டாம் என்னும் நகரில் மிகப் பிரம்மாண்ட முறையில் அமைக்கப்பட்டு துல்லியமாக செதுக்கப்பட்ட சிற்ப வேலைப்பாடுகளுடன் கொண்ட தெய்வம்சம் பொருந்திய அற்புத ஆலயமாக வெகு சிறப்பாக காட்சியளிக்கும் இவ்வாலயத்தில் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் வீற்றி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார். சுப்ரமணியன் திருவருள் பெற்று உய்வோம்

ஓம் சரவண பவ

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Baski

சிறப்பான கட்டுரை, சிறந்த விளக்கம், பாராட்டுகளும் வாழ்த்துக்களும். தொடரட்டும் உங்கள் சேவை